'ரெமோ' படத்தைப் பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ரெமோ'. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ராஜா தயாரித்திருக்கிறார்.
அக்டோபர் 7ம் தேதி வெளியான இப்படம், இந்த ஆண்டில் 'கபாலி' மற்றும் 'தெறி' ஆகிய படங்களைத் தொடர்ந்து அதிக வசூலான படம் என்ற சாதனையை எட்டியிருக்கிறது. மேலும், தமிழக வசூல் இப்படம் 50 கோடியைத் தாண்டும் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவித்தார்கள்.
இந்நிலையில் இப்படக்குழுவினருக்கு ரஜினி தனது பாராட்டைத் தெரிவித்திருக்கிறார். இது குறித்து தயாரிப்பாளர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் "'ரெமோ' படத்தைப் பார்த்துவிட்டு ரஜினி சார் என்னையும், சிவகார்த்திகேயனையும் வாழ்த்தினார். அவருக்கு படம் பிடித்திருந்தது, படக்குழுவைப் பாராட்டினார்.
ரஜினி சாருடைய தீவிர ரசிகனாக இருக்கும் எனக்கு இது ஒரு பெரிய அங்கீகாரமாகவும், வாழ்நாள் முழுக்க நான் பட்ட கஷ்டங்களுக்கு கிடைத்த சாதனையாகவும் கருதுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
ராஜா தயாரிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 11ம் தேதி தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது.