சிம்பு, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘வெந்து தணிந்தது காடு’. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ஜெயமோகன் கதை எழுதியுள்ளார். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, தமிழில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் 15-ம் தேதி வெளியிடுகிறது. இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நடிகர் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான், தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, நடிகர்கள் நாசர், ஜீவா, ஆர்.ஜே.பாலாஜி, யுவன் சங்கர் ராஜா மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது: தமிழ்ப் படத்தைத் தூக்கி நிறுத்துவது தமிழ்ப்படம்தான். தமிழ்ப் படத்தைக் கெடுப்பதும் தமிழ்ப்படம்தான். நட்சத்திர அந்தஸ்து என்பது இருக்கும், இல்லாமல் போகும். திறமைதான் முக்கியம். எந்த துறையாக இருந்தாலும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். இது என் அனுபவத்தில் வந்த அறிவுரை. தொடர்ந்து வித்தியாசமான முயற்சிகள் செய்தால், ரசிகர்கள் கைவிட மாட்டார்கள். தமிழ் ரசிகர்கள் நல்ல சினிமாக்களை கைவிட்டதே கிடையாது. தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தியது எந்த ஒரு தனி நடிகனாகவும் இருக்க முடியாது. ரசிகர்களாகத்தான் இருக்க முடியும். இந்த சினிமாதுறையின் உயிரே நல்ல ரசிகர்கள்தான். இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் பேசினார்.