தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு வரும் 16-ம் தேதி மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் ரூ.75 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வரும் 16-ம் தேதி தேசிய சினிமா தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் உள்ள சுமார் 4000 மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணமாக ரூ.75 மட்டுமே வசூலிக்கப்படும் என இந்திய மல்டிபிளக்ஸ் திரையரங்க சங்கம் அறிவித்துள்ளது. பிவிஆர், ஐநாக்ஸ், சினிபோலிஸ் போன்ற நிறுவனங்கள் இந்தக் கட்டணக் குறைப்பை மேற்கொண்டுள்ளன.
கரோனாவுக்கு பிறகு திரையரங்குகளை வெற்றிகரமாகத் திறக்கப் பங்களித்த ரசிகர்களுக்கு நன்றி கூறும்விதமாக இந்தக் கட்டணக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே இந்த கட்டணக் குறைப்பு தமிழ்நாட்டிலும் உண்டா? என்று திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியனிடம் கேட்டபோது, “தென்னிந்தியாவில் அது சாத்தியமில்லை. வரும் 15-ம் தேதி, சிம்புவின் “வெந்து தணிந்தது காடு’ படம் வெளியாகிறது. டிக்கெட் கட்டணத்தை நாங்களும் குறைத்தால் அந்தத் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும்” என்றார்.