தமிழ் சினிமா

பிரச்சினைகளுக்காக நான் கண் கலங்கவில்லை: சிவகார்த்திகேயன் விளக்கம்

ஸ்கிரீனன்

எனக்கு வாழ்க்கையில் பிரச்சினை இருக்கிறது என்பதற்காக நான் கண் கலங்கவில்லை என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

'ரெமோ' வெற்றியடைந்ததிற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் "இந்தப் படம் வெளியாகும் வரை பிரச்சினை. எவ்வளவு தான் பிரச்சினைக் கொடுப்பீர்கள். எவ்வளவு கொடுத்திருக்கிறீர்கள் என்று உங்களுக்கே தெரியும். நீண்ட நாட்களாக கஷ்டப்பட்டு வருகிறேன். நானோ ராஜாவோ சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து படம் எடுக்க வரவில்லை. ரசிகர்கள் ரசிப்பதற்காக மட்டுமே படம் எடுக்க வருகிறோம். அதற்கு வேலை செய்ய விடுங்கள். கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், என்னையும் ராஜாவையும் வேலை செய்ய விடுங்கள்" என்று கண்ணீர் விட்டார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயனின் பேச்சால் திரையுலகினர் பலரும் அதிர்ச்சியடைந்தார்கள். பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்தார். அவருடைய கண்ணீர் பேச்சுக்குப் பிறகு தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார் சிவகார்த்திகேயன்.

அப்போது அவருக்கு இருக்கும் பிரச்சினைகள், அழுததிற்கான காரணம் உள்ளிட்ட கேள்விகளுக்கு சிவகார்த்திகேயன் அளித்த பதில்களின் தொகுப்பு:

"எனக்கு வாழ்க்கையில் நிறைய பிரச்சினை இருக்கிறது. அதனால் தான் அழுதேன் என்று நினைக்கிறார்கள். எனது 30 வருட வாழ்க்கையில் பிரச்சினை எப்போதுமே இருந்திருக்கிறது. சினிமாவில் சமீப காலமாக பிரச்சினைகளை சந்தித்து வருகிறேன்.

நான் ஒருவரை நம்பிவிட்டால், அவர்களோடு 100% ஒன்றிவிடுவேன். இதுவரைக்கும் நான் பணியாற்றிய அனைவரோடும் அப்படித்தான் இருந்திருக்கிறேன். தயாரிப்பாளர் ராஜா அண்ணாவின் உழைப்பைப் பார்த்து என்னை அறியாமல் வந்த கண்ணீர் தான் அது. அந்த இடத்தில் நான் எனது உணர்வுகளை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். இனிமேல் அழ மாட்டேன். என்னை மாதிரி நிறைய துறையில் கஷ்டப்படுகிறவர்களுக்கு எனது கஷ்டம் புரியும்.

எனக்கு வாழ்க்கையில் பிரச்சினை இருக்கிறது என்பதற்காக நான் கண் கலங்கவில்லை. ராஜா என்ற மனிதர் தனது குடும்பத்தைக் கூட பார்க்காமல் 24 மணி நேரமும் வேலை செய்துக் கொண்டிருந்தது ரொம்ப நெகிழ்வாக இருந்தது. எனக்கு உணர்வுகளை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்று. இனிமேல் என் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்வேன். அந்த இடத்தில் அழாமல் ராஜா அண்ணனை தனியாக கட்டிப்பிடித்து அழுதிருக்கலாம். இனிமேல் என் உணர்வுகளை யாரிடம் காட்ட வேண்டுமோ, அவர்களிடம் மட்டும் காட்டிக் கொள்வேன்.

பிரச்சினைகளுக்குள் போகாமல் சந்தோஷமாக படம் நடிக்க வேண்டும் என்பது தான் என் எண்ணம். எப்போதுமே என்னைப் பற்றி வரும் செய்திகளுக்கு நான் ரியாக்ட் பண்ண மாட்டேன். அது தான் என்னுடைய பிரச்சினை. நான் நடிப்பு வகுப்புக்கு எல்லாம் சென்று பட்டைத் தீட்டப்பட்டு வந்தவன் கிடையாது. தினமும் படப்பிடிப்பில் கற்று வருகிறேன்.

என்னுடைய வளர்ச்சி பிரச்சினைக்கு ஒரு காரணமாக பார்க்கிறேன். கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் இருந்தது கிடையாது. ஒரு சில படங்கள் பண்ண முடியாத சூழல் ஏற்பட்டு இருக்கிறது. பண்ணக் கூடாது என்பது கிடையாது. அப்புறம் பண்ணிக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். அதில் எனக்கு எந்தவொரு பிரச்சினையும் கிடையாது. நான் சினிமாவில் ஏமாற்றிவிட்டு எங்கேயும் ஒடிவிட முடியாது. கொடுத்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றுவேன். சரியான திட்டமிடலோடு, சரியான படங்களை பண்ணவேண்டும் என்பது தான் என் எண்ணம்.

மதுரை விமானநிலையத்தில் ஏற்பட்ட பிரச்சினையின் போது, அதைவிட்டு விலகித் தான் போனேன். அந்த வீடியோ பதிவு அனைவரிடமும் இருக்கிறது. இவர்கள் தான் காரணம் என்று என்னால் ஒரு புகார் கொடுத்திருக்க முடியும். என் அப்பா சிறைத்துறையில் ஒரு பெரிய அதிகாரியாக இருந்திருக்கிறார். ஒரு முறை ஜெயிலுக்கு போய்விட்டு வந்தால் என்னவெல்லாம் ஆகும், அவர்களுடைய குடும்பம் என்னவாகும் என்பதை பார்த்திருக்கிறேன். நான் அப்படி யாரையும் ஜெயிலுக்கு அனுப்புவதில் உடன்பாடு கிடையாது.

தற்போது இருக்கும் பிரச்சினைக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று போகக் கூட நான் விரும்பவில்லை. இன்னும் ஒரு சில நாட்களில் அனைத்து பிரச்சினைகளும் முடிவு பெறும் என நினைக்கிறேன். இனிமேல் இதே போன்றதொரு பிரச்சினைகள் வராமல் பார்த்துக் கொள்வேன். தற்போது இருக்கும் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பது தான் அனைவரின் ஆசையும் கூட" என்று தெரிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

SCROLL FOR NEXT