முழுக்க வடசென்னை மக்களின் வாழ்வியலைப் பேசும் படமாக கார்த்தி நடிக்கும் 'மெட்ராஸ்' இருக்கும் என இயக்குநர் ரஞ்சித் கூறினார்.
கார்த்தி, கேத்தரின் தெரசா உள்ளிட்ட பலர் நடிக்க, 'அட்டகத்தி' ரஞ்சித் இயக்கியிருக்கும் படம் 'மெட்ராஸ்'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் இப்படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. ஜுன் 23ம் தேதி இப்படத்தின் இசை வெளியீடு நடைபெற இருக்கிறது.
'மெட்ராஸ்' குறித்து இயக்குநர் ரஞ்சித், "வடசென்னை மக்களின் வாழ்வியலைச் சொல்கிற படம் தான் 'மெட்ராஸ்'. அவர்களின் வாழ்க்கையை, கொண்டாட்டத்தை, அரசியலை சொல்கிற இயல்பான பதிவாக 'மெட்ராஸ்' படம் இருக்கும். வடசென்னை சமூகத்தின் பாசாங்கற்ற ரத்தமும் சதையுமான பதிவாக இருக்கும்.
இது தன்நபர் சார்ந்த கதை அல்ல. ஒரு பகுதி மக்களின் வாழ்க்கையின் பதிவு, அங்கு வாழும் ஒரு இளைஞனாக கார்த்தி வாழ்ந்து இருக்கிறார். எங்கும் அவர் தனித்து வெளிப்பட மாட்டார். மண்ணோடு மக்களோடு அந்தக் கலாச்சார சூழலோடு கலந்த ஒரு குணச்சித்திரமாகவே தெரிவார்." என்றார்.
இப்படத்தின் கதை பற்றி கருத்துக் கேட்கவே, இதன் திரைக்கதையை கொடுத்து கார்த்தியிடம் கேட்டு இருக்கிறார்கள். படித்துவிட்டு இப்படத்தில் நானே நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். ஐடி படித்த இளைஞராக கார்த்தி நடித்துள்ளார்.
நாயகி கேத்தரின் தெரசா ஒரு தெலுங்கு நடிகை. அவருக்கு தமிழும், சென்னைத் தமிழும் பயிற்சியளிக்கப்பட்டு நடித்துள்ளார். காளியாக கார்த்தி, கலையரசியாக கேத்தரின் தெரசா தவிர மற்றவர்கள் பெரும்பாலும் புதுமுகங்களை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.
படத்தின் 99% காட்சிகள் வடசென்னைப் பகுதியிலேயே படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். 70 நாட்கள் வடசென்னையில் இதுவரை படப்பிடிப்பு நடைபெற இடங்களில் எல்லாம் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள்.