''ஜெயிச்சிட்டுவா என்று அம்மா சொல்லி அனுப்பினார். நான் ஜெயித்துக்கொண்டிருப்பதாக நினைக்கிறேன்'' என 'நட்சத்திரம் நகர்கிறது' பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித் நெகிழ்ச்சியுடன் பேசினார்.
சென்னையில் நடந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய பா.ரஞ்சித், ''ஜெய்பீம் என்ற வார்த்தை தான் என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்திருக்கிறது. 'அட்டக்கத்தி'யில் தொடங்கிய பயணம் இன்று 'நட்சத்திரம் நகர்கிறது' வரை நீண்டிருக்கிறது. யோசிப்பதை படமாக எடுக்க வேண்டும் என்பது முக்கியமானதாக நினைக்கிறேன். அதை நான் வெங்கட்பிரபுவிடம் பணியாற்றியபோது கற்றுக்கொண்டேன். என் வாழ்க்கையை 'சென்னை 28' படம் தான் வடிவமைத்தது. அந்தப் படத்தில் நான் வேலை செய்யவில்லை என்றால், சினிமாவில் நான் முட்டி மோதியிருந்திருப்பேன். நாம் யோசிப்பதை படமாக எடுக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தது 'சென்னை 28' திரைப்படம்.
அது என் வாழ்வில் முக்கியமான படமாக நினைக்கிறேன். என்னுடைய கல்லூரியின் இறுதி ஆண்டில் வெங்கட்பிரபுவை சந்தித்தேன். அலுவலகத்தில் உட்கார வைத்து என்னிடம் பேசினார். அதுவே எனக்கு மிகப் பெரிய ஆச்சரியமாக இருந்தது. கல்லூரி படிக்கும்போதே நான் பல இயக்குநர்களை சந்திக்க முயற்சித்திருக்கிறேன். ஆனால் கேட்டுக்கு உள்ளே செல்ல முடியாது. என்னுடைய உதவி இயக்குநர்களையும் நான் அப்படித்தான் நடத்துக்கிறேன். ஆணித்தரமாக எந்தவித சமரசமும் இல்லாமல் படங்களை எடுக்க முடியும் என நிரூபித்தவர் வெற்றிமாறன். அவர் என்னுடைய இன்ஸ்பிரேஷன்.
கலைப்புலி தாணு என் வாழ்வில் முக்கியமானவர். இயக்குநர்களுக்கு எந்த நெருக்கடியும் கொடுக்காதவர். 'கபாலி' முடிந்த பிறகு, திரைத்துறையில் பலரும் நெகட்டிவ் கமெண்ட்ஸ் சொல்லும்போது என்னை அழைத்து இவ்வளவு பணத்தை படம் வசூலித்தது. படம் பெரும் ஹிட் என எனக்கு விளக்கமளித்து நம்பிக்கை கொடுத்தார். அப்போது வெளியில் இருக்கும் பலரும் படம் ஹிட் என கூறியிருந்தனர். ஆனால், திரைத்துறையில் படம் தோல்வி என கூறும்போது நான் பெரும் மன உளைச்சலில் இருந்தேன். என்னை அப்போது ஆற்றுப்படுத்தினார். அவரை என்னால் மறக்க முடியாது.
அதேபோல, 'அட்டக்கத்தி' வெளியிட முடியாமல் தவித்தபோது எனக்கு பெரும் உதவியாக இருந்தவர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. அவர் அன்று உதவவில்லை என்றால் என்னால் இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது. படத்தில் வேலை செய்த அனைவரும் திறமையான ஆட்கள். சமரசமில்லாத சமூகத்துக்கு ஏற்ற படங்களை எடுக்க வேண்டும் என்பது தான் 'நீலம் புரொடக்சன்' நிறுவனத்தின் நோக்கம்.
சென்னைக்கு பக்கத்து ஊர் தான் நான். இருந்தாலும் அங்கிருந்து கிளம்பி வரும்போது, 'ஜெயிச்சிட்டு வா' என்று கூறி அனுப்பினார். ஜெயித்துக்கொண்டிருப்பதாக நினைக்கிறேன்'' என்று கூறிவிட்டு தாயார், அண்ணன், மாமாவை மேடை ஏற்றினார் பா.ரஞ்சித்.