சுராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கத்தி சண்டை' நவம்பரில் வெளியாகும் என்று விஷால் தெரிவித்துள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' படத்தில் நடித்து வருகிறார் விஷால். சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
'துப்பறிவாளன்' படத்துக்கு முன்பாக சுராஜ் இயக்கத்தில் 'கத்தி சண்டை' என்னும் படத்தில் நடித்திருக்கிறார் விஷால். நந்தகோபால் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு 'ஹிப் ஹாப்' தமிழா இசையமைத்து இருக்கிறார்.
தமன்னா, வடிவேலு, சூரி உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தீபாவளி வெளியீடாக இருக்கும் என்று விஷால் அறிவித்திருந்தார்.
ஆனால், விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து 'காஷ்மோரா' மற்றும் 'கொடி' ஆகிய படங்கள் மட்டுமே தீபாவளி வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்நிலையில், "அக்டோபர் 14ம் தேதி 'கத்தி சண்டை' டீஸர் வெளியாகும். தீபாவளிக்கு இசையும், நவம்பரில் படமும் வெளியாகும்" என்று விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இதனால் தீபாவளி வெளியீட்டில் இருந்து 'கத்தி சண்டை' பின்வாங்கியிருப்பது உறுதியாகி இருக்கிறது.