ஒரு படம் வெளியாகும் போது, சில காலத்துக்கு முன்பு அப்படத்தைப் பார்த்துவிட்டு ஒரு வாரத்துக்குள் விமர்சனம் வெளியாகும். ஆனால், தற்போதுள்ள சூழல் அப்படியில்லை. பல்வேறு பொது ஜனங்களே நாங்களும் விமர்சகர்கள் தான் என்று களம் இறங்கியிருக்கிறார்கள். ஒரு படம் வெளியாகும் அன்றே முதல் காட்சி பார்த்துவிட்டு தங்களுடைய சமூக வலைத்தளத்தில் விமர்சனத்தை பதிவது அல்லது வீடியோவில் பேசி வெளியிடுவார்கள்.
ரஜினி படத்தில் தொடங்கி புதிய நாயகன் படம் வரை இவர்களுடைய விமர்சனத்தில் இருந்து தப்புவதில்லை. ஒரு சிலர், படம் பார்க்கும் போதே தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் அப்படத்தை கிண்டல் செய்யும் பாணியிலும் கருத்துக்களை வெளியிடுவார்கள்.
கொந்தளிக்கும் தமிழ் திரையுலகம்
இம்மாதிரியான விமர்சனங்களால் படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கப்படுவதாக குரல் எழுப்பத் தொடங்கி இருக்கிறார்கள். ரூ.45 கோடி முதலீட்டுடன் வெளியாகும் ஒரு திரைப்படம் சுமாராக இருக்கும் பட்சத்தில் இவர்களுடைய கலாய்ப்பு விமர்சனத்தால் மக்கள் திரைக்கு வருவதில்லை என்பது தான் உண்மை. மேலும், திரையரங்கில் படம் பார்க்கும் போதே ட்வீட்டாளர்கள் போடும் விமர்சன ட்வீட்டுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார் நடிகர் சித்தார்த்.
இம்மாதிரியான விமர்சனங்கள் குறித்து இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் கேட்ட போது, "படம் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே, இந்தக் காட்சி மொக்கை, இது ஓ.கே என்று விமர்சனத்தை தொடங்கிவிடுகிறார்கள். முழுப் படத்தையும் முதலில் பாருங்கள், படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது உங்களிடம் யாருமே விமர்சனத்தைக் கேட்கவில்லை. முன்பு படம் வெளியாகி 3 நாட்கள் கழித்து தான் விமர்சனம் வந்தது. இன்று அப்படியில்லை, சமூக வலைதளம் இருக்கிறது. வீடியோ எடுத்து போட்டால் பற்றிக் கொள்கிறது. நல்ல விமர்சனம் பண்ணுவர்கள் எல்லாம் முதல் 3 நாட்கள் விடுத்து விமர்சனம் பண்ணலாம் என்பது என் கருத்து.
மக்களை இந்தப் படம் பார், இதைப் பார்க்காதே என படம் பார்க்க இருப்பவர்களுக்குள் நிறைய சந்தேகத்தைக் கொண்டு வந்துவிடுகிறார்கள். கண்டிப்பாக இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தில் இது சாத்தியம் கிடையாது தான். நல்ல விமர்சகர்கள் நினைத்தால் பண்ணலாம்.
சச்சின் மேட்ச் பணம் கொடுத்து பார்க்கிறீர்கள் என்றால் சச்சின் அவுட்டான உடன் போய் இந்தியாவின் கோச் மற்றும் சச்சினை திட்ட முடியுமா? அதற்கு நாம் தகுதியற்றவர்கள். அதற்கு தகுதி இருப்பவர்கள் சொல்வதற்கும் ஒரு வரைமுறை இருக்கிறது. நம்மால் மற்ற எந்தவொரு துறையையும் விமர்சனம் பண்ண முடியவில்லை. சினிமாவுக்கு மட்டும் தான் இப்படி நடக்கிறது" என்று கடும் காட்டமாக குறிப்பிட்டார்.
மறுக்கும் ட்விட்டர் விமர்சகர்கள்
இந்த சர்ச்சை குறித்து ட்விட்டர் தளத்தில் விமர்சனம் செய்பவர்களிடம் கேட்ட போது, "இது முற்றிலும் தவறானது. இன்று மக்களே தாங்கள் பார்க்கும் படத்தைப் பற்றி அவர்களுடைய சொந்தக் கருத்துகளை அவர்களுடைய சமூக வலைதளத்தில் வெளியிடுகிறார்கள். இதனை தடுக்க முடியாது.
'தனி ஒருவன்' என்ற படத்துக்கு அனைவருமே சூப்பர் என்றவுடன்தான் மாலையிலிருந்து கூட்டம் அதிகரித்தது. அவ்வாறு கூட்டம் அதிகரிக்கும் போது ட்விட்டர் தளங்களில் இயங்குபவார்களால் தான் கூட்டம் அதிகரித்தது என்று சொன்னார்களா?. நல்ல படங்களை நாங்கள் கொண்டாட தவறுவதில்லை.
இன்று முன்னணி நாளிதழ்களின் இணையதளங்களிலே முதல் நாள் விமர்சனம் வந்துவிடுகிறது. அனைத்துக்கும் வளர்ச்சிதான் காரணம். முதல் நாளே விமர்சனம் எழுத வேண்டும் என்ற போட்டி இருக்கிறது. இதனை தடுக்க முடியாது" என்று குறிப்பிட்டார்கள்.
உங்களுடைய கருத்து என்ன?
திரையுலகினர் மற்றும் விமர்சகர்கள் இடையே ஏற்பட்டு இருக்கும் இந்த கருத்து வேறுபாடு குறித்து உங்களுடைய கருத்து என்ன?