நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திக்காக தன்னுடைய சம்பளத்தில் பாதியைக் குறைத்து படம் நடித்துக் கொடுத்தார் அஜித்.
லிங்குசாமி இயக்கத்தில் அஜித் நடித்த 'ஜி' படத்துக்கு முன்புவரை வெளியான பல அஜித் படங்களைத் தயாரித்தவர் 'நிக் ஆர்ட்ஸ்' சக்கரவர்த்தி. 'ஜி' படத்தின் படப்பிடிப்புக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தார்கள்.
ஆனால், தன்னிடம் கால்ஷீட் தேதிகள் இருக்கிறது. ஆகையால் அஜித் தனக்கு படம் பண்ண வேண்டும் என்று புகார் அளித்தார் சக்கரவர்த்தி.
இப்பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த 'திருப்பதி' படப்பிடிப்புக்கு சென்றிருக்கிறார்கள். அப்போது "நான் அவருக்கு நடித்துக் கொடுக்கும் கடைசிப் படமாக அது இருக்கட்டும். அவர் கஷ்டப்படுகிறார் என்கிறீர்கள். நான் தற்போது வாங்கும் சம்பளத்தில் பாதியை மட்டும் கொடுக்கச் சொல்லுங்கள்" என்று உடனடியாக தெரிவித்துவிட்டார் அஜித்.
அந்த தேதிகளை இன்னொரு தயாரிப்பாளருக்கு மாற்றிவிட்டு, நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி சம்பாதித்துக் கொண்டார். அப்படி உருவான படம் தான் 'பில்லா'
அஜித்தின் இந்த தன்மையைப் பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தெரிவித்திருக்கிறார் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன்.