பா.ரஞ்சித் இயக்கியுள்ள 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ட்ரெய்லர் எப்படியிருக்கிறது என்பது குறித்து பார்ப்போம்.
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராமன் நடிக்கும் திரைப்படம் 'நட்சத்திரம் நகர்கிறது'. இந்தப் படத்தில் நாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். இவர்களுடன், 'டான்சிங் ரோஸ்' ஷபீர், கலையரசன் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். கிஷோர் குமார் ஒளிப்பதிவில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்திற்கு டென்மா இசையமைத்துள்ளார்.
இப்படத்தை யாழி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்காக தயாராக இருக்கும் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி கவனத்தைப் பெற்றது. இந்நிலையில், படம் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதியான விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - படம் முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருப்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. காதலை மட்டுமில்லாமல் அதிலிருக்கும் சிக்கல்களையும் பேச முயற்சிக்கிறது படம். கட்டாயத் திருமணங்கள், திருமணங்களில் உள்ள சிக்கல்கள், தன்பால் ஈர்ப்பாளர்களுக்கிடையயான காதல், திருநங்கைக்கும் ஆணுக்குமான காதல் என அழுத்தமான பல விஷயங்கள் காட்சிப்படுத்தபட்டுள்ளன.
அதேபோல காதலுக்கு வயதில்லை என்பதையும் ட்ரெய்லர் பதிவு செய்கிறது. 'ஆனா அங்க சுத்தியிருந்த கூட்டத்துக்கு பல கதைகள் தேவைப்பட்டது'' என இருவரின் காதலைச் சுற்றி உலகம் கட்டமைக்கும் கதைகளையும், சாதி, மதப் பிரிவினைகளையும் ட்ரெய்லரின் இறுதிக் காட்சிகள் உணர்த்துகின்றன.
இது படத்தின் கனத்தை இன்னுமே கூட்டுகிறது. தொடக்கத்தில் காதல், தொடர்ந்து காதலிப்பவர்களிடையே இருக்கும் சிக்கல், அடுத்து காதலர்கள் வீட்டில் நிலவும் பிரச்சினை என மூன்று பாகங்களாக விரியும் இந்த ட்ரெய்லர் இதுவரை வந்த படங்களில் வித்தியாசமான முயற்சியை இயக்குநர் பா.ரஞ்சித் மேற்கொண்டிருப்பதை உறுதி செய்கிறது.