மும்பை திரைப்பட விழாவில் 'சில சமயங்களில்' திரையிட்டு முடிந்தவுடன் கிடைத்த வரவேற்பால் படக்குழு பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது.
'ஒப்பம்' படத்துக்கு முன்பாக ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவான படம் 'சில சமயங்களில்'. பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி, நாசர், அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இயக்குநர் விஜய் மற்றும் பிரபுதேவா தயாரித்திருக்கிறார்கள்.
எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் ப்ரியதர்ஷன். ரத்த பரிசோதனை விடைக்காக காத்திருக்கும் 8 கதாபாத்திரங்களின் பின்புலம் குறித்து இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறார் ப்ரியதர்ஷன் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் பணிகள் முடிந்து விருது விழாக்களுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. கோல்டன் குளோப் விருதுக்காக அக்டோபர் 6-ம் தேதி அமெரிக்காவில் இப்படம் திரையிடப்பட்டது. அதில் இயக்குநர் ப்ரியதர்ஷன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட படக்குழு கலந்து கொண்டார்கள்.
இந்தியாவில் முதல் திரையிடலாக மும்பை திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இப்படத்தின் திரையிடல் முடிந்தவுடன் படம் பார்த்த அனைவருமே எழுந்து நின்று கரவொலி எழுப்பினார்கள். இந்த வரவேற்பால் படக்குழு மிகவும் மிகழ்ச்சியில் இருக்கிறது.
இது குறித்து பிரகாஷ்ராஜ் "மும்பை திரைப்பட விழாவில் 'சில சமயங்களில்' திரைப்படத்தின் திரையிடலில் கலந்து கொண்டு திரும்பி வந்திருக்கிறேன். திரைப்பட காதலர்களிடமிருந்து அற்புதமான வரவேற்பு கிடைத்தது. நன்றி" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.