தமிழ் சினிமா

திரை விமர்சனம்: கடமையை செய்

செய்திப்பிரிவு

கட்டிடப் பொறியாளர் அசோக் (எஸ்.ஜே.சூர்யா) திடீரென வேலையை இழந்துவிட, அடுக்குமாடி குடியிருப்பில் செக்யூரிட்டியாக சேர்கிறார். தரமில்லாமல் கட்டப்பட்ட அந்தக் குடியிருப்பின் பல பகுதிகள், எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்பதை அறிந்ததும் பில்டரிடம் (வின்சென்ட் அசோகன்) சொல்கிறார்.

பின் எதிர்பாராத விபத்தில் சிக்கும் அவர், அரிதான மூளை நோயால் பாதிக்கப்படுகிறார். இதனால், மனதில் இருப்பதை வெளிப்படுத்த முடியாத நிலையில், குடியிருப்பில் வசிப்பவர்களை அவர் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை.

ஸ்டூப்பர் என்னும் அரிய வகை மூளை நோய் சார்ந்த விவரணைகள், கட்டிடப் பொறியியல் சார்ந்த நுணுக்கமானத் தகவல்களை வைத்து த்ரில்லர் கதைக்கான அடித்தளத்தை வலுவாக உருவாக்கியிருக்கிறார், இயக்குநர் வேங்கட்ராகவன். அதன் மீது எழுப்பப்பட்ட கட்டிடமான திரைக்கதையில்தான், நாயகனுக்கு இருப்பதைப் போல ஏகப்பட்ட கோளாறுகள்.

அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கும் செக்யூரிட்டியாக பணியாற்றுபவருக்குமான பரஸ்பர அன்பு மலரும் காட்சிகள் இதமளிக்கின்றன. மருத்துவர்களிடம் மனதில் இருப்பதை வெளிப்படுத்த முடியாமல் எஸ்.ஜே.சூர்யா தவிக்கும் காட்சிகள், அவர் மீது பரிவுகொள்ள வைக்கின்றன. ஆனால் நகைச்சுவை என்னும் பெயரில் சேர்க்கப்பட்டுள்ள பல காட்சிகளில் எரிச்சல்.

எஸ்.ஜே.சூர்யா, மருத்துவமனையைவிட்டு வெளியேறிய பின்நடக்கும் பல விஷயங்களில் நம்பகத்தன்மை இல்லை. நாயகனின் மனைவி, முன்னாள் செவிலியர் என்பதை வைத்து, இரண்டாம் பாதியில் நிகழும் சின்ன திருப்பம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் அடுத்த காட்சியிலேயே அவர் கடத்தப் படுவதால் திரைக்கதையின் தடுமாற்றம் மீண்டும் தொடங்கிவிடுகிறது.

எஸ்.ஜே.சூர்யா, சிறப்பாக நடித்திருக்கிறார். யாஷிகா ஆனந்த், தொடக்கத்தில் தடுமாறினாலும்கிளைமாக்ஸ் காட்சிகளில் ஒப்பேற்றிவிடுகிறார். திருடனாக வரும் மொட்டை ராஜேந்திரன் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். வில்லன் சார்லஸ் வினோத் கதாபாத்திரத்தில் எந்தப் புதுமையும் இல்லை. மோகன்வைத்யா உட்பட குடியிருப்பு வாசிகளாக வருபவர்கள் தங்கள் பங்களிப்பை சரியாகத் தந்திருக்கிறார்கள்.

அருண் ராஜின் இசையில் கானாபாலச்சந்தர் பாடியுள்ள ‘கடமையைசெய்’ பாடலை ரசிக்க முடிகிறது.கதையில் இருக்கும் சுவாரசியத்தைத் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் திரைக்கதையை கவனத்துடன் எழுதியிருந்தால், ‘கடமையை செய்,’ ரசிகர்களுக்குத் திருப்தி அளிக்கும் கடமையை சரியாகவே செய்திருக்கும்.

SCROLL FOR NEXT