தமிழ் சினிமா

10 ஆண்டுகள் கடந்தும் நினைவில் நிற்கும் ‘அட்டகத்தி’ - ஏன் ஸ்பெஷல்?

கலிலுல்லா

'அட்டகத்தி' திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் கடந்துவிட்டன. இயக்குநர் ரஞ்சித் தமிழ் சினிமாவில் தடம் பதித்தும் இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த சூழலில் அட்டகத்தி படம் குறித்து பார்ப்போம்.

'காதல் ஒரு பூ மாதிரி.. ஒருமுறை உதிர்ந்தால் அவ்வளவு தான் மீண்டும் பூக்கவைக்க முடியாது' என டயலாக் பேசாமல் காதல் எத்தனை தடவை வேண்டுமானாலும் பூக்கும் என சென்னையின் அசல் பாஷையிலிருந்து சொல்லிய படம் 'அட்டகத்தி'. பா.ரஞ்சித்தின் 10ஆண்டு கால திரைப் பயணத்தின் தொடக்கப்புள்ளி.

படத்தின் பலமே நாயகன் தினேஷ் தான். 'ஓவரா பளு தள்ளாத'.. 'யார்ரா பளு தள்றா..புட்போர்டு அடிக்கிறதுல நான் ஒரு கிங்குடா' என தன்னுடைய மைனஸயே ப்ளாஸாக மாற்றி நண்பர்களிடம் பல்பு வாங்கும் ஒரு கேரக்டர். 'இப்போ என்னால எப்படி மச்சி போண்டா சாப்பிட முடியும்?’ என போண்டாவைத் துப்பிவிட்டு, அடுத்த காட்சியிலேயே பதறியடித்து ஓடி போண்டாவை வாயில் தள்ளுவது, 'ண்ணோவ் இன்னான இது' என கட்டிங் கடையில் தனது தலைமுடியைப்பார்த்து அழுவது என 'அட்டகத்தி' வார்த்தைக்கு கச்சிதமாக பொருள் சேர்த்திருக்கும் அவரது நடிப்பு. 'நான் அழகாத்தானே மச்சி இருக்கேன். ஸ்டைலாத்தானே மச்சி இருக்கேன்... என்னை ஏன் மச்சி பிடிக்கலை?’ என படம் நெடுங்கிலுமான தன்னுடைய ஆதங்கத்தால் நம்மை ரசிக்க வைப்பார்.

அதிகம் பதிவு செய்யப்படாத அசல் சென்னைவாசிகளின் வாழ்க்கையை அதற்கே உண்டான யதார்த்ததுடன் கடத்தியிருப்பார் பா.ரஞ்சித். மிகவும் சாதாரணமான ஒரு கதைக்களம். தினகரன் என்ற வாலிபனின் அட்டம்ட் நிறைந்த காதல் கதைகளின் வாழ்க்கை பயணத்தை சுவாரஸ்யமாகவும், அயற்சித் தராமல் எழுதியிருக்கும் விதத்தில் அறிமுக இயக்கத்திலேயே முத்திரை பதித்திருப்பார் ரஞ்சித்.

எப்படியாவது காதலித்து தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்துடன் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் நாயகன் தினேஷ் குழுவின் பெயர் 'லவ்வர்ஸ் பாய்ஸ்'. பெண்களை கவர ஃபீல்டு ஓர்க் செய்யும் அந்த குழுவில் தினேஷுக்குத்தான் எந்த பெண்ணும் ஓர்க்அவுட் ஆகாது. அப்படியாக அவர் வளர்க்கும் காதல் ஒன்று இறுதியில் கைகூடியதா என்பது தான் 'அட்டகத்தி' கதை.

மொத்தப் படமுமே பெரிய சீரியஸ்னஸ் இல்லாமல் ஜாலியாகவே கடக்கும். தனது சின்ன எக்ஸ்பிரஷன், அடிக்கடி வாங்கும் மொக்கைகளால் படத்தை என்கேஜாக கொண்டு சென்றிருப்பார் தினேஷ். அவரது கதாபாத்திரம் நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கும்.

குறிப்பாக பேருந்தில் சம்பந்தப்பட்ட நபருக்கு பதிலாக தினேஷை அடிக்கும் காட்சியில், இரு பெண்கள் முன்னால் அவமானப்பட்டுவிட்டோம் என குனிக்குறுகி நிற்கும் காட்சி, கராத்தே மாஸ்டரிடம் அடிவாங்கிவிட்டு 'வேணும்னே அடிசிட்டான்டா' என கீச்சு குரலில் அழுதுகொண்டிருக்கும்போது, 'மச்சா அவ வந்துட்டாடா' என சொன்னதுமே அடுத்த நொடியை உடல்மொழியையும், முகபாவனைகளையும் மாற்றுவது என மொத்த படத்தையும் தன் வசப்படுத்தியிருப்பார் நாயகன் தினேஷ். பேருந்தில் ஓரக்கண்ணால் தினேஷைப்பார்ப்பது, கோபத்துடன் உதட்டை முணுமுணுப்பது என நந்திதாவும் தேவையான நடிப்பை பதிவு செய்திருப்பார்.

நாயகன் மொக்கை வாங்கும் காட்சிகள், காதல் காட்சிகள், ஃபீல் செய்யும்போது, 'ரூட்டு தல'யாகி கெத்தாக நடந்துவரும்போது என படம் முழுக்க கதையொட்டத்திற்கான தன்மையை தன்னுடைய பின்னணி இசையால் உயர்த்தியிருப்பார் சந்தோஷ் நாராயணன். எல்லாவற்றையும் கடந்து படத்தின் நாயக கதாபாத்திரத்தின் பரிணாமத்தை அடுத்தடுத்த கட்டங்களில் எந்த நெருடலும் இல்லாமல் நகர்த்தி சென்றவிதம் படத்தின் பெரிய ப்ளஸ். எங்கேஜான திரைக்கதையும், கதாபாத்திர வடிவமைப்பும், யதாராத்தமான வசனங்களும், காமெடியான காட்சிகளும் தான் 10 வருடங்கள் கழித்தும் 'அட்டகத்தி' படத்தை இன்னும் தாங்கி நிற்கிறது.

SCROLL FOR NEXT