வி ஹவுஸ் புரொடக் ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள படம் ஜீவி-2. விஜே கோபிநாத் இயக்கியுள்ளார். வெற்றி, அஸ்வினி சந்திரசேகர், ரோகிணி, மைம் கோபி, கருணாகரன், ரமா என முதல் பாகத்தில் இடம்பெற்ற நடிகர்கள் இதிலும் நடித்துள்ளனர். வரும் 19-ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் கே.பாக்யராஜ், தம்பி ராமையா, சீனுராமசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, ‘‘எனக்கு பிடித்த கதைகளைத்தான் தேர்ந்தெடுக்கிறேன் என்றாலும் அது ரசிகர்களுக்கும் பிடிக்க வேண்டும். சின்ன படங்களுக்கு ஓபனிங் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது. ‘மாமனிதன்’ படமும் அப்படித்தான். அதே நேரம் ஓடிடியில் வெளியாகி நல்ல வெற்றி பெற்றது. தியேட்டர் நெருக்கடிகள் காரணமாகத்தான் இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுகிறோம்” என்றார்.
கே.பாக்யராஜ் பேசும்போது, ’’இன்று, சினிமா பற்றிய புரிதல் இல்லாமல் பலர் இருக்கிறார்கள். திரைக்கதையில் உருவாக்கப்படும் ஒரு காட்சியைக் கூட, ஏதோ எடிட்டர் செய்தது போன்று நினைத்துக் கொள்கிறார்கள். படங்களை ஓடிடி தளத்தில்நேரடியாக வெளியிடுவது பாதுகாப்பானது என்றாலும் தியேட்டரில் வெளியாகி, பின் ஓடிடிக்கு வந்தால் நன்றாக இருக்கும்” என்றார்.