தமிழ் சினிமா

“ஹீரோ கைகாட்டுபவர்தான் இயக்குநர் என்றாகிவிட்டது” - பாக்யராஜ்

செய்திப்பிரிவு

''தற்போது ஹீரோ யாரை கைகாட்டுகிறாரோ அவர்தான் இயக்குநர் என சினிமாவின் நிலை மாறிவிட்டது'' என இயக்குநர் பாக்யராஜ் பேசினார்.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் கோபிநாத் இயக்கத்தில் வெற்றி நடிக்கும் திரைப்படம் 'ஜீவி-2'. கடந்த 2௦19ல் வெளியான 'ஜீவி' படத்தின் இரண்டாம் பாகமாக அதன் தொடர்ச்சியாக இது உருவாகி உள்ளது. இதில், அஸ்வினி சந்திரசேகர், ரோகிணி, மைம் கோபி, கருணாகரன் மற்றும் ரமா என முதல் பாகத்தில் இடம்பெற்ற அனைத்து முக்கிய நட்சத்திரங்களும் இந்த இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைக்க, பிரவீண் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். வரும் ஆகஸ்ட் 19-ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பாக்யராஜ், ''முன்பெல்லாம் இயக்குநர்கள்தான் ஹீரோக்களை உருவாக்குவார்கள். ஆனால் இப்போது கேப்டன் ஆப் தி ஷிப் என்றால் அது ஹீரோ என்று மாறிவிட்டது. ஹீரோ கைகாட்டுபவர் தான் இயக்குநர் என்கிற நிலை உருவாகிவிட்டது. அதேசமயம் நடிகர் வெற்றி விஜே கோபிநாத்தை இயக்குநராக தேர்ந்தெடுத்து, அவர் மீது வைத்த நம்பிக்கையை காட்டிவிட்டார்.

இன்று சினிமாவை பற்றிய புரிதல் இல்லாமல் பலர் இருக்கிறார்கள். திரைக்கதையில் உருவாக்கப்படும் ஒரு காட்சியைக் கூட ஏதோ எடிட்டர் செய்தது போன்று நினைத்துக் கொள்கிறார்கள். ஓடிடி தளத்தில் வெளியிடுவது பாதுகாப்பானது தான் என்றாலும் தியேட்டரில் வெளியாகி விட்டு பின்னர் ஓடிடிக்கு வந்தால் நன்றாக இருக்கும்'' என்றார்.

SCROLL FOR NEXT