ஸ்ரீரங்கம் கோயில் வாசலில் உள்ள பெரியார் சிலை குறித்து அவதூறாக பேசிய திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகி விட்டதால் அவரைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் புகார் ஒன்றை அளித்தார். அதில், "கடந்த 1ஆம் தேதி மதுரவாயலில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் பங்கேற்றார். அப்போது கூட்டத்தில் பேசிய கனல் கண்ணன் ஸ்ரீரங்க கோவில் வாசலில் உள்ள பெரியார் சிலையை உடைத்து அகற்றுகின்ற நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும் என பேசினார்.
ஏற்கெனவே 2006 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை சில சமூக விரோதிகள் சேதப்படுத்தியதால் கலவரம் உண்டானது. அந்த சம்பவம் முடிந்து சுமார் 15 ஆண்டுகள் ஆனநிலையில் தற்பொழுது மீண்டும் கலவரத்தை உண்டாக்கும் நோக்கில் கனல் கண்ணன் பேசியது கண்டிக்கத்தக்கது. அதே போல் திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் கலவரத்தை தூண்டும் வகையில் சிலர் செயல்பட்டு வருகின்றனர்.
இரு மதத்தினரிடையே மோதலை உண்டாக்கும் வகையிலும் கனல்கண்ணன் பேசியுள்ளதால் அவர் மீதும் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மீதும் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளான 153- கலகம் செய்ய தூண்டிவிடுதல், 505(1)(b)- அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கனல் கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனல் கண்ணனை கைது செய்ய சைபர் க்ரைம் போலீசார் மதுரவாயல் வீட்டில் சென்று தேடி உள்ளனர். ஆனால் அங்கு இல்லை. இதைபோல வடபழனி, வளசரவாக்கம் வீடுகளிலும் தேடியும் இல்லை என்பதால் அவர் தலைமறைவாகி விட்டதாக சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் கைது செய்ய தீவிரமாக தேடி வருகின்றனர்.