ஆன்டிபயாடிக் துறையில் செய்த ஆய்வு காரணமாக உலக அளவில் பிரபலமாகி, சொந்த கிராமத்துக்கு திரும்புகிறார் மருத்துவ விஞ்ஞானியான சரவணன் (சரவணன் அருள்). தாத்தா தொடங்கிய கல்லூரியை நிர்வகித்துக்கொண்டே, தனது ஊர் மக்களுக்கு சேவை செய்ய நினைக்கிறார்.
அந்த சமயத்தில், கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய் காரணமாக அவரது பால்ய நண்பர் (ரோபோ சங்கர்) உயிரிழந்துவிடுகிறார். இதன் தாக்கத்தால், சர்க்கரை நோயை நிரந்தரமாக குணமாக்கும் மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்குகிறார் சரவணன். அப்படியொரு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால், இன்சுலின் உள்ளிட்ட மருந்துகளின் பல்லாயிரம் கோடி அளவிலான வர்த்தகம் தாறு மாறாக அடிவாங்கும்.
இதனால், சுமன் உள்ளிட்ட மருந்து விற்பனை மாபியா கும்பல், சரவணனின் ஆராய்ச்சிக்கு தடை ஏற்படுத்த பல வகைகளிலும் முயற்சிக்கிறது. அதையெல்லாம் எதிர்கொண்டு சரவணன் மருந்தை கண்டுபிடித்தாரா இல்லையா என்பது ‘தி லெஜண்ட்’ படத்தின் கதை. சர்க்கரை நோயின் தலைநகரம் என்கிற நிலையை எட்டியுள்ளது இந்தியா. தீவிர நலவாழ்வு பிரச்சினையான இதை, கதையின் மையமாக தேர்ந்துகொண்ட இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரிக்கு பாராட்டுகள்.
சர்க்கரை நோய் குறித்த தற்காலத் தரவுகள், சில மருத்துவ உண்மைகள் ஆகியவற்றை குடும்பம் - நட்பு ஆகியவற்றை வைத்து உருவாக்கப்பட்ட சென்டிமென்ட் காட்சிகள் வழியாக பார்வையாளர்களுக்கு கடத்துவதில் முழு வெற்றி பெறுகின்றனர். கலை இயக்கம், ஒளிப்பதிவு, இசை, விஷுவல் எஃபெக்ட்ஸ் உள்ளிட்ட அம்சங்களை தேவைக்கு அதிகமாகவே பயன்படுத்தி, பிரம்மாண்ட காட்சியமைப்பு, அதிரடியான சண்டை காட்சிகள், கலர்ஃபுல் பாடல் காட்சிகளை அமைத்துள்ளனர்.
பிரபலமான சீனியர் நடிகர்களை துணைக் கதாபாத்திரங்களுக்கு அமர்த்திக்கொண்டுள்ளனர். ஏற்கெனவே பல படங்களில் பார்த்து சலித்த வில்லன் நடிகர்களைக் கொண்டு பயமுறுத்த முயன்றுள்ளனர். ஏற்கெனவே வெற்றி பெற்ற பல பொழுதுபோக்கு படங்களின் சாயலில் எழுதப்பட்ட காலாவதியான திரைக்கதையைக் கொண்டு இந்த அனைத்து முயற்சிகளையும் செய்துள்ளனர். அமரர் விவேக், யோகிபாபு என இரண்டு பெரிய நகைச்சுவை நடிகர்களை தனி ஆவர்த்தனம் செய்யவிடாமல், கதையோடு இணைத்துக்கொண்டதை பாராட்டலாம்.
ஆனால், அவர்களது நகைச்சுவையிலும் புதிதாக எதுவும் இல்லை. டாக்டர் சரவணனாக நடிக்கும் சரவணன் அருளுக்கு ‘ஹேர் ஸ்டைல்’ பொருந்துகிற அளவுக்கு ஒப்பனை பொருந்தவில்லை. சிறப்பு ஒப்பனையில் ஜவுளிக்கடை பொம்மைபோல இருக்கிறார். என்னதான் செல்வந்தர் வீட்டுப் பிள்ளை, கல்வித் தந்தையின் மகன் என்று நிறுவப்பட்டாலும், ஒவ்வொரு காட்சியிலும் கதாநாயகிகளுக்கு இணையாக அவர் வண்ண வண்ண ஆடைகள் அணிந்து வருவது படு செயற்கையாக இருக்கிறது.
இயல்பாக நடிக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் முகத்தில் உணர்வுகளை கொண்டுவர முடியாமல் கஷ்டப்படுகிறார். மாறாக, பஞ்ச் வசனம் பேசும் காட்சிகள், சண்டை காட்சிகள், ஒரு இளைஞனாக தன்னை முன்னிறுத்தும் காட்சிகளில் வெளிப்படுத்தும் உடல் மொழி ஆகியவற்றில் தேறிவிடுகிறார்.
காதல், நடனக் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் உழைத்திருந்தால் அதிலும் பாஸ் மார்க் வாங்கியிருக்கலாம். விழிப்புணர்வு தரும் கதைக் களத்தை யோசித்த இயக்குநர்கள், அதை இன்றைய தலைமுறை பார்வையாளர்களையும் ஈர்க்கும் திரைக்கதைக்குள் பொருத்த தவறியதில் இந்த ‘லெஜண்ட்’டை நட்டாற்றில் நிற்க வைத்திருக்கிறார்கள்.