சிவகார்த்திகேயன் மீது தயாரிப்பாளர்கள் மூவர் கொடுத்துள்ள புகார் தொடர்பாக, அவர் சென்னை திரும்பியவுடன் தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தெரிகிறது.
'ரெமோ' வசூல் ரீதியில் வெற்றியடைந்ததற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் "இந்தப் படம் வெளியாகும் வரை பிரச்சினை. எவ்வளவு தான் பிரச்சினைக் கொடுப்பீர்கள். எவ்வளவு கொடுத்திருக்கிறீர்கள் என்று உங்களுக்கே தெரியும். நீண்ட நாட்களாக கஷ்டப்பட்டு வருகிறேன். நானோ ராஜாவோ சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து படம் எடுக்க வரவில்லை. ரசிகர்கள் ரசிப்பதற்காக மட்டுமே படம் எடுக்க வருகிறோம். அதற்கு வேலை செய்ய விடுங்கள். கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், என்னையும் ராஜாவையும் வேலை செய்ய விடுங்கள்" என்று கண்ணீர் விட்டார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயனின் பேச்சால் திரையுலகினர் பலரும் அதிர்ச்சியடைந்தார்கள். பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தில் சிவகார்த்திகேயன் மீது மூன்று தயாரிப்பாளர்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள்.
இது குறித்து தயாரிப்பாளர் சங்க நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, "சிவகார்த்திகேயன் மீது ஞானவேல்ராஜா, 'எஸ்கேப் ஆர்டிஸ்ட்' மதன் மற்றும் 'வேந்தர் மூவிஸ்' மதன் ஆகியோரது தரப்பில் புகார்கள் வந்துள்ளது. மூவருமே எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்துக்கு படம் நடித்து தருவதற்காக முன்பணம் கொடுத்திருக்கிறோம். ஆனால், 24 ஏ.எம். நிறுவனத்துக்கு மட்டுமே தொடர்ச்சியாக படம் நடித்து வருகிறார் என்று அப்புகாரில் தெரிவித்துள்ளார்கள்.
சிவகார்த்திகேயன் தரப்பில் ஞானவேல்ராஜா நிறுவனத்துக்கு படம் பண்ணுவதற்காக ஒப்பந்தம் போடப்பட்டு, முன்பணம் வாங்கியது உண்மை தான் என்று ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால், மற்ற இருவரிடமுமே எந்தவொரு முன்பணமும் வாங்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளது சிவகார்த்திகேயன் தரப்பு. இது தொடர்பாக ஆர்.டி.ராஜா மற்றும் சிவகார்த்திகேயன் இருவரையும் தயாரிப்பாளர் சங்கப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க இருக்கிறோம். தற்போது சிவகார்த்திகேயன் ஆஸ்திரேலியாவில் இருப்பதால் அவர் சென்னை திரும்பியவுடன் இப்பேச்சுவார்த்தை இருக்கும். விரைவில் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
ஒரு நடிகர் படத்தின் ஒப்பந்தமாகும் போது சம்பளம் எவ்வளவு, எவ்வளவு நாட்கள் கால்ஷீட் தேதிகள், எவ்வளவு முன்பணம் கொடுத்துள்ளோம் என்பது உள்ளிட்டவை தயாரிப்பாளர் தரப்பிலிருந்து ஒப்பந்தம் போடப்பட்டால் மட்டுமே இருவருக்கும் புரிதல் இருக்கும். அதை அனைவரும் முறையாக பின்பற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்கள்.