'மருது'வில் ராதாரவியுடன் நடித்த அனுபவங்களை மறக்க முடியாது என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
விஷால், ஸ்ரீதிவ்யா, ராதாரவி, ஆர்.கே.சுரேஷ், லீலா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மருது'. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு இமான் இசையமைத்திருக்கிறார். அன்புசெழியன் தயாரித்திருக்கும் இப்படம் மே 20ம் தேதி வெளியாக இருக்கிறது.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் எதிர் எதிர் அணியில் போட்டியிட்டவர்கள் விஷால் மற்றும் ராதாவி. நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கினார் ராதாரவி. இருவரும் இணைந்து நடிக்க ஒப்பந்தமானதால் 'மருது' படத்துக்கு எதிர்பார்ப்பு உண்டானது.
ராதாரவியுடன் இணைந்து நடித்த அனுபவங்கள் குறித்து விஷால், "முத்தையா என்னிடம் கதை சொன்னபோது அப்பாத்திரத்துக்கு ராதாரவி அண்ணன் நடித்தால் நன்றாக இருக்கும்.. உங்களுக்கு எப்படி? என்று தயங்கியபடி கேட்டார். இதை கேட்க ஏன் தயக்கம்? யார் தேவையோ அவர்களை நடிக்க வையுங்கள் தயங்காதீர்கள், நடிக்கட்டுமே.. இதுவரை நாங்கள் இணைந்து நடித்ததில்லை என்றேன்.
நடிகர் சங்க தேர்தல் பிரச்சினையில் அவர் எதிர் தரப்பில் நின்றார் என்று பகைமை பாராட்டுவதும் அவர் முகத்தில் விழிக்கவே மாட்டேன் என்பதும் முட்டாள்தனம் என்பேன்.நடிகர் சங்க தேர்தலில் அவர் ஒரு கோணத்தில் நின்றார்,நான் ஒரு கோணத்தில் நின்றேன், அவ்வளவுதான்.
அவர் என் படத்தில் நடிப்பது பற்றி படக்குழுவுக்கு மட்டுமல்ல வேடிக்கை பார்க்க வந்த மக்களுக்கும் கூட எதிர்பார்ப்பு, பரபரப்பு இருந்தது. நாளைக்கு வருகிறார். இன்றைக்கு வருகிறார் என்ன நடக்கப்போகிறதோ என்று எதிரிகளைப் போல விறுவிறுப்பு காட்டினார்கள். ராதாரவி அண்ணன் வந்தார். நடித்தார். அவர் சிறந்த அனுபவம் உள்ள நடிகர்.
சங்கம் வேறு; நடிப்பு வேறு. சங்கம் வேறு; தொழில்வேறு இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. ராதாரவி அண்ணன் வந்தார் என்னைக் கட்டிப் பிடித்தார். "இப்போது நிறைய தொடர்ச்சியாக படங்கள் நடிக்கிறேன். வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நடிகர் சங்கத்துக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் சொல்லுப்பா செய்றேன்" என்றார். அவர் ஒரு மூத்த நடிகர். அவர் மரியாதைக்குரியவர் என்பதை என்றும் நான் மறந்ததில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.