தமிழ் சினிமா

“கடைசியில் அந்த நாள் வந்துவிட்டது” - தேசிய விருது குறித்து ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

செய்திப்பிரிவு

'சூரரைப் போற்று' படத்தின் சிறந்த பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் 'கடைசியாக அந்த நாள் வந்துவிட்டது' என நெகிழ்ந்திருக்கிறார்.

2020-ம் ஆண்டில் வெளியான படங்களை அடிப்படையாக கொண்டு 68-வது தேசிய விருதுகள் டெல்லியில் இன்று மாலை அறிவிக்கப்பட்டன. அதில் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது 'சூரரைப் போற்று' 5 விருதுகளை படம் வென்றுள்ளது.

சிறந்த படத்துக்கான விருது, சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது , அபர்ணா பால முரளிக்கு சிறந்த நடிகைக்கான விருது, ஜி.வி.பிரகாஷுக்கு சிறந்த பின்னணி இசைக்கான விருது, சிறந்த திரைக்கதைக்கான விருது ஆகிய ஐந்து தேசிய விருதுகளை ‘சூரரைப் போற்று’ திரைப்படம் வென்றுள்ளது. இந்நிலையில், தனக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ட்விட்டரில் நெகிழ்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'மிகப்பெரிய ஒரு நாள் வரும்...ஒரு நாள் நீ வெற்றி பெறுவாய். உனக்கு தேவையானது ஒரு நாள் நடக்கும். இப்படி காத்திருந்து ஆசைப்பட்ட அந்த நாள் கடைசியில் வந்துவிட்டது. இந்த உலகிற்கும் அனைவருக்கும் நன்றி. என்னுடைய அப்பா வெங்கடேஷ், என்னுடைய குடும்பம், சைந்தவி, பவானி, அன்வி என அனைவரும் எனக்காக தந்த அனைத்திற்கும் நன்றி.

சூரரைப் போற்று அணிக்கும், இயக்குநர் சுதா கொங்கராவிற்கும், சூர்யா சார், 2டி மற்றும் ராஜசேகர பாண்டியன் என இந்த தளத்தில் எனக்கான வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார்.

தனது தனித்துவ இசைத் திறனால் தமிழ் சினிமா மட்டுமின்றி தேச அளவிலும் கவனம் ஈர்த்து வரும் ஜி.வி.பிரகாஷ்குமார் பெறும் முதல் தேசிய விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT