முன்னணி தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படத்தை இயக்க சுந்தர்.சி ஒப்பந்தமாகியுள்ளார்.
'ஆடி வெள்ளி', 'காஞ்சனா', 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' உள்ளிட்ட பல்வேறு வரவேற்பைப் பெற்ற படங்களை தயாரித்த நிறுவனம் தேனாண்டாள் பிலிம்ஸ். படத்தயாரிப்பு மட்டுமன்றி பல்வேறு பேய் படங்களை தமிழகமெங்கும் விநியோகம் செய்து வருகிறது.
தற்போது சசி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் சித்தார்த் நடிக்கும் படத்தை தயாரிக்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை தயாரிக்க இருக்கிறது. இப்படத்திற்கு இன்னும் இயக்குநர் முடிவாகவில்லை.
இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் 100வது படத்தை இயக்க சுந்தர்.சி ஒப்பந்தமாகி இருக்கிறார். பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
வரலாற்று பின்னணியோடு உருவாக இருக்கும் இப்படத்தின் முதற்கட்ட பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் சுந்தர்.சி. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளிலும் ஒரே தலைப்பாக வருவது போன்று தலைப்பு பரிசீலனை நடைபெற்று வருகிறது. மேலும், மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகர், நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு.
இப்படத்துக்காக அந்த காலத்து கப்பல்கள், அரண்மனைகள் என பல்வேறு பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்த இருக்கிறார்கள்.