ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் 'கபாலி' படத்தின் டீஸர், 1 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை புரிந்திருக்கிறது.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, கலையரசன், தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. தாணு தயாரித்திருக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இப்படத்திற்கு இன்னும் சில காட்சிகள் மட்டுமே படப்பிடிப்பிற்கு இருக்கின்றன. படத்தின் டப்பிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மே 1ம் தேதி இப்படத்தின் டீஸர் யூ-டியுப் தளத்தில் வெளியானது. டீஸர் வெளியான ஒவ்வொரு மணி நேரத்திலும் சாதனை படைத்து வந்தது. தற்போது 1 கோடி பார்வைகளைக் கடந்த டீஸர் என்ற சாதனை நிகழ்த்தியிருக்கிறது 'கபாலி'. அதுவும் 4 நாட்களில் இச்சாதனையை எட்டியிருக்கிறது.
இதற்கு முன்பு ஆசியாவில் எந்த ஒரு படத்தின் டீஸர், இவ்வளவு குறுகிய கால கட்டத்தில் 1 கோடியை எட்டியதில்லை என்கிறார்கள். 'கபாலி' டீஸரின் சாதனையால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
'கொலவெறி' சாதனையை முறியடிக்குமா?
'கொலவெறி' பாடல் உருவான விதத்தை இதுவரை 10 கோடிக்கும் அதிகமானோர் கண்டுகளித்திருக்கிறார். அந்த வீடியோ பதிவு வெளியிடப்பட்டு 5 வருடங்கள் ஆகிறது. 'கபாலி' டீஸர் பார்த்தவர்களின் எண்ணிக்கையை வைத்து பார்த்தால் விரைவில் இந்த சாதனை முறியடிக்கப்படும் என்கிறார்கள்.