தமிழ் சினிமா

கபாலி டீஸர்: அஜித், விஜய் சாதனையை முறியடித்தார் ரஜினி!

ஸ்கிரீனன்

அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் டீஸர் மற்றும் ட்ரெய்லர் சாதனைகளை பெரும் எண்ணிக்கையில் முறியடித்தார் ரஜினி.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, கலையரசன், தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. தாணு தயாரித்திருக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் இன்னும் சில காட்சிகள் மட்டுமே படப்பிடிப்பிற்கு இருக்கின்றன. படத்தின் டப்பிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

'கபாலி' டீஸர் மே 1ம் தேதி காலை 11 மணியளவில் யூ-டியுப் தளத்தில் வெளியிடப்பட்டது. ரஜினி ரசிகர்கள், தமிழ் திரையுலகினர் உள்ளிட்ட பலரும் டீஸரை பாராட்டி தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்தார்கள். டீஸர் முடியும் தருவாயில் ரஜினி கூறும் 'மகிழ்ச்சி' என்ற வசனமும் பிரபலமாகி வருகிறது. பலரும் தங்களுடைய பதிலாக மகிழ்ச்சி, மகிழ்ச்சி என்று பதிவிடுவதை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது.

தற்போது, 'கபாலி' டீஸர் யூ-டியுப் தளத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. தென்னிந்திய படங்களில் குறைந்த மணி நேரத்தில் ஒரு படத்தின் டீஸரை அதிகம் பேர் பார்த்த பட்டியலில் 'கபாலி' முதல் இடத்தை பிடித்திருக்கிறது. டீஸர் வெளியான 22 மணி நேரத்தில் 50 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்.

இதற்கு முன்பு அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நாயகர்களின் படங்கள் செய்த சாதனைகள் அனைத்தையும் 'கபாலி' பட டீஸர் எண்ணிக்கையில் பலமடங்கு கடந்திருக்கிறது. மேலும், ஆசிய அளவில் இதுவே பெரிய சாதனையாக கூறப்படுகிறது.

மேலும், இந்தி திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான் ஆகியோரது படங்களின் ட்ரைலரை முதல் நாள் பார்த்தவர்களின் எண்ணிக்கையை 'கபாலி' மிக எளிதாக கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வரை யூ-டியுப் தளத்தில் 'கபாலி' டீஸரை 51,11,128 பேர் பார்த்திருக்கிறார்கள். 2,36,416 பேர் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.

'கபாலி' படத்தின் டீஸர்:

</p>

SCROLL FOR NEXT