‘பொன்னியின் செல்வன் பாகம்1’ படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை இயக்குநர் மணிரத்னம் படமாக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. வரலாற்று நாவலை தழுவி உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது. இதனிடையே படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தோற்றமும் போஸ்டர்களாக வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சோழப் பேரரசின் பட்டத்து இளவரசன் அதித்த கரிகாலன் வேடத்தில் நடிக்கும் விக்ரமின் தோற்றத்தைப் படக்குழு ட்விட்டரில் வெளியிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, வந்தியத்தேவனாக நடிக்கும் கார்த்தியின் தோற்றமும் பழுவூர் ராணி நந்தினியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராய் தோற்றமும் வெளியானது. அதேபோல குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்கும் த்ரிஷாவின் தோற்றம் வெளியிடபட்டது. இன்று படத்தில் ராஜ ராஜ சோழனாக நடிக்கும் ஜெயம் ரவியின் கதாபாத்திரம் இன்று வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசரை பொறுத்தவரை, பிரமாண்டமான காட்சிகளுடன், ஒவ்வொரு ஃப்ரேமும் விறுவிறுப்பாக கடக்கிறது. இந்தப் படம் பார்வையாளர்களுக்கு சிறந்த காட்சியனுபவமாக இருக்கும் என்பதை டீசர் உறுதி செய்கிறது. த்ரிஷாவுக்கும், ஐஸ்வர்யா ராயுக்குமான ஃப்ரேம்கள் ஈர்க்கின்றன.
டீசருக்கு இடையே, 'இந்த கள்ளும், பாட்டும், ரத்தமும், போர்களமும் எல்லாமே அதை மறக்கத்தான், அவளை மறக்கத்தான், என்னை மறக்கத்தான்' என விக்ரம் பேசும் ஒரு வசனம் மட்டுமே இதில் வைக்கப்பட்டுள்ளது. போர்க் காட்சிகள் சிரத்தையுடன் காட்சிப்படுத்தபட்டுள்ளதை உணர முடிகிறது. தோட்ட தரணியின் கலை ஆக்கம் கவனிக்க வைக்கிறது. மொத்தத்தில் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை நெருங்க முயற்சிக்கும் ஒரு படைப்பாக படம் இருக்கும் என்பதை டீசர் உணர்த்துகிறது.