தமிழ் சினிமா

முதல் பார்வை: மருது - திரும்பத் திரும்ப வருது!

செய்திப்பிரிவு

ராசபாளையத்துல பெரிய ஆளு ராதாரவி. கூலி ஆளு விசாலு.. மூட்டை தூக்கற வேலை.. அவரை தூக்கி வளத்தது அவரோட அப்பத்தா. அப்பத்தான்னா விசாலுக்கு உசிரு.. ராதாரவி வளத்துவுட்ட அரசியல்வாதியா ஆர்.கே. சுரேசு (அதாம்ணே தாரை தப்பட்டைல வில்லனா வந்தாரேண்ணே.. அவருதாம்ணே).. அவருக்கும் நம்ம கீரோ விசாலுக்கும் ஒருகட்டத்துல முட்டிக்குதுண்ணே.. வில்லன் என்னா பண்ணுவாரோ அத சுரேசு பண்றாருண்ணே.. அதுக்கு பதிலடியா கீரோ என்னா பண்ணுவாரோ அதையே விசாலு பண்றாருண்ணே.. அம்புட்டு தாண்ணே சமாசாரம்.

படம் பூரா ஊரச் சுத்திச் சுத்தி எடுத்திருக்காய்ங்க.. மண்ணு, வயலு, மலைன்னு நல்லா இருக்குண்ணே. விசாலு மொறச்சு பாத்து வசனம் பேசறாரு, மத்த நேரத்துல அழுக்கு கைலி கட்டிகிட்டு மல்லு கட்டுறாரு, பாட்டப்ப கலர் கலரா டிரெஸ் போட்டுட்டு ஆட்டம் ஆடறாரு. அவருக்கு குடுத்த வேலைய அவரு செஞ்சுபுட்டாருண்ணே.

இந்த சிரிதிவ்யா இருக்குதே, அந்தப் புள்ளைக்கு நல்ல ரோல்ணே.. அதால எம்புட்டு முடியுமோ அம்புட்டு நடிக்குது.. பாவம் சின்னப்புள்ள தானே. சூரி வழக்கம்போல நண்பனா வராரு. காமெடி பெரிசா ஒண்ணும் ஒர்க் அவுட் ஆவல.. ரெண்டு மூணு எடத்துல வாய்விட்டு சிரிச்சாய்ங்க.. அவ்ளோதான். இந்த படத்துல அவருக்கு எமோசனல் சீன்லாம் கூட இருக்குண்ணே.

படத்துல நல்ல விசயம் அந்த அப்பத்தா தாண்ணே.. பேரு என்னவோ லீலாவாம்.. நல்ல்ல்லா நடிக்குதுண்ணே.. இம்மாம் பெரிய ரோல் குடுத்திருக்காய்ங்களே.. சரியா பயன்படுத்துக்கிச்சு. ஆர்.கே. சுரேசு கச்சிதமா பண்ணியிருக்காருண்ணே.. ராதாரவி வெள்ளை கிருதா வெச்சுகிட்டு வழக்கம்போல நல்லா நடிச்சிருக்காருண்ணே. ஆனா ரிலீஸுக்கு முன்னாடி இவரும் விசாலும் சேர்ந்து நடிச்சிருக்கறதுக்கு அவங்க கொடுத்த பில்ட் அப் அளவுக்கு ஒண்ணியும் இல்ல. சரி அது முடிஞ்ச கதை. விட்ருவோம்.

கேமராகாரரு வேல்ராஜாமே.. அவருக்கென்ன மவராசன்.. வளைச்சு வளைச்சு நல்லா எடுத்திருக்கார்ணே.. எடிட்டரு என்னதான் பண்ணுவாரு பாவம். குடுத்ததை தானே வெட்டி போட முடியும். நல்லா எடுத்து குடுத்தா, போட மாட்டாரா என்ன.. இமான் அண்ணன் பாட்டுல கோட்டைவிட்டு, பேக் கிரவுண்ட் மீசிக்ல மீட்டுகிட்டாருண்ணே.

படம் ஆரம்பிச்சதுலேந்து ஒண்ணு போட்டுத் தள்றாங்க.. இல்லாட்டி பேசித் தள்றாங்க. அதுகூட பரவால்லண்ணே.. ஒருத்தர் விடாம எல்லாரும் எகனை மொகணையா பேசறாங்க. 'காய்ச்சல் - பாய்ச்சல்..' 'புலி மாதிரி அடிப்பேன்.. ஏன்.. தேவைப்பட்டா புலியையே அடிப்பேன்'.. முடியலண்ணே. சீரியஸா பேசறாய்ங்களா, இல்ல அவங்களே கலாய்க்க எடுத்து குடுக்கறாய்ங்களான்னு தெரில.

படத்துல விதவிதமா கத்தி காட்றாய்ங்க.. ஆளாளுக்கு குத்தறாய்ங்க.. நாம எல்லா சீனையும் முன்னமே பாத்தா மாதிரி இருக்கு. சில நேரம் நாம குட்டிப்புலி பாக்கறோமா, கொம்பன் பாக்கறோமா இல்ல சண்டக்கோழி பாக்கறோமான்னு கூட சந்தேகம் வந்துடுது. முன் பாதிய விட பின் பாதி கொஞ்சம் வேகமா போறதால, உக்கார முடிஞ்சுதுண்ணே.

மத்தபடி சொல்லிக்கறாப்ல சிறப்பா இல்லண்ணே.. என்னாது கதையா? இந்தாரு.. கதையைச் சொன்னா குத்திக் கொன்டே போட்ருவாய்ங்க.. நாஞ்சொல்ல மாட்டேன்.. என்னா லந்தா.. அட சொல்லமாட்டேங்கறேன்ல.. யே.. போப்பா.. இருந்தா ச்சொல்லியிருக்க மாட்டேனா.

முத்தையாண்ணே.. ஏண்ணே.. இப்படி பண்ணிப்புட்டீங்களேண்ணே.. குட்டிப்புலியையும் கொம்பனையும் பாத்துபுட்டு உங்கள நம்பி வந்தோம்ணே.. சரி.. விடுண்ணே விடுண்ணே.. அடுத்த படத்துல பாத்துகிறலாம்ணே.

என்னடா இவன் மதுரை பாஷையில உசுர வாங்குறானேன்னு நீங்க கேக்குறது நியாயம்தான்... ஒரு பக்க அளவுலயே தாங்கிக்க முடியாத நீங்க... ரெண்டு மணி நேரம் எப்படி தாங்கப் போறீங்க?!

SCROLL FOR NEXT