தமிழ் சினிமா

ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன்... - கவனம் ஈர்க்கும் ‘பொன்னியின் செல்வன்’ போஸ்டர்கள் 

செய்திப்பிரிவு

'பொன்னியின் செல்வன்' படத்தின் ஆதித்ய கரிகாலன் மற்றும் வந்தியத்தேவன் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களின் தோற்றங்களை படக்குழு போஸ்டராக வெளியிட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கல்கியின் புகழ்பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலின் திரை ஆக்கம்தான் இந்தப் படம்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது. அண்மையில் 'வருகிறான் சோழன்' என்ற தலைப்புடன் 'பொன்னியின் செல்வன்' படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது.

இந்நிலையில், இந்தப் படத்தில், சோழப் பேரரசின் பட்டத்து இளவரசன் அதித்த கரிகாலன் வேடத்தில் நடிக்கும் விக்ரமின் தோற்றத்தைப் படக்குழு ட்விட்டரில் வெளியிட்டிருந்தது. தற்போது வந்தியத்தேவனாக நடிக்கும் கார்த்தியின் தோற்றமும் வெளியாகியுள்ளது. அந்தப் போஸ்டரின் கேப்ஷனாக 'ராஜ்ஜியம் இல்லாத இளவரசன், உளவாளி, சாகசக்காரன்... இதோ வந்தியத்தேவன்!' என குறிப்பிடப்பட்டுள்ளது. படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT