நம்பிக்கைதான் வாழ்க்கை என்பதை உணர்த்தும் வகையில் நகைச்சுவை கலந்த திரைப்படமாக 'பன்னிக்குட்டி' திரைப்படம் இருக்கும் என்று அப்படத்தின் இயக்குநர் அனுசரண் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் அனுசரண் இயக்கத்தில் யோகிபாபு, கருணாகரன் முதன்மைக் பாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் 'பன்னிக்குட்டி'. லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் மற்றும் சமீர் பரத் ராம் இப்படத்தை தயாரிக்கின்றனர்.
காமெடி டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் ஜூன் 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. திண்டுக்கல் லியோனி, சிங்கம் புலி, விஜய் டிவி புகழ் ராமர், தங்க துரை போன்ற முன்னணி நகைச்சுவை நடிகர்கள் மற்றும் இன்னும் பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு கிருஷ்ணகுமார் இசையமைத்துள்ளார் மற்றும் சதீஷ் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரவி முருகையா கதை எழுதியுள்ளார்.
இது தொடர்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய திண்டுக்கல் ஐ.லியோனி, ''இந்தப் படத்தின் மூலமாக 21 வருடத்திற்கு பிறகு நடிப்பிற்கு திரும்ப வருகிறேன். படத்தில் என்னை தேர்ந்தெடுத்த இயக்குநருக்கு நன்றி. நான் இந்தப் படத்தில் சாமியார் பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதை இயக்குநர் காரணமாகதான் என்னிடம் கொடுத்திருக்கிறார்'' என்றார்.
இயக்குநர் அனுசரண் கூறும்போது, ''வாழ்கையில் துவண்டு போன நிலையில் இருக்கும்போது, அதில் இருந்து மீண்டு வருவதற்காகவே காமெடி படம் கொடுக்க நினைத்தேன். ரவி முருகையா உடைய கதை தான் இந்த 'பன்னிகுட்டி'. இந்தக் கதையை தயாரிப்பாளரிடம் கூறும்போது, அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. படத்தில் லியோனி நடிக்க வந்தது மகிழ்ச்சியான ஒன்று. நிஜ பன்னிகுட்டியுடன் படப்பிடிப்பை நடத்தினோம்.
அது மிகவும் கடினமாக இருந்தது. விலங்குகளை வைத்து எடுப்பது சாதாரண காரியம் இல்லை. பல நெருக்கடிகளை கடந்து, சில யுக்திகளை பயன்படுத்தி தான் படம் எடுத்தோம். உசிலம்பட்டியை சுற்றி இருக்கும் கிராம மக்களுக்கு நன்றி கூற வேண்டும். அவர்களுடைய ஒத்துழைப்புக்கு நன்றி. இந்தப் படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, ஒரு சிரிப்புடன் வெளியே வருவீர்கள். நம்பிக்கை தான் வாழ்கை என்பதை இந்தப் படம் கற்றுக்கொடுக்கும்'' என்றார்.
நடிகர் கருணாகரன் பேசுகையில், ''ஒவ்வொரு கதாபாத்திரமும் நமக்கு கிடைக்கும்போது, அந்தக் கதாபாத்திரத்திற்கு நான் தகுதியானவனா என்று யோசிப்பேன். இந்தக் கதையை இயக்குநர் கூறியபோது, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தில் எல்லாருமே முக்கியக் கதாபாத்திரங்கள்தான். இந்தப் படம் நம்பிக்கை கொடுக்கும் படம்'' என்றார்.