மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிப்பதற்காக விமானி ஆவதற்கான அடிப்படைகளை கற்றுக் கொண்டு வருகிறார் கார்த்தி.
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருக்கும் படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிதி ராவ் நாயகியாக நடிக்கவிருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.
மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.
"இப்படத்திற்காக கார்த்தி விமானி ஆவதற்கான அடிப்படைகளை கற்றுக் கொண்டிருக்கிறார். விமானத்தை எப்படி இயக்குவது, விமானியாக, அந்த இருக்கையில் எப்படி உட்கார வேண்டும் உள்ளிட்ட விஷயங்களை 2 - 3 வாரங்கள் கற்றுக் கொள்ளவிருக்கிறார். இவை முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கும்" என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.
இப்படத்தில் வெளிநாடு வாழ் இந்தியராக நடிக்கிறார் கார்த்தி. இந்தியா வரும் அவருக்கு எப்படி மருத்துவராக இருக்கும் அதிதி ராவ் மீது காதல் வருகிறது என்பது தான் கதைக்களமாம். இப்படத்தில் முதலில் சாய் பல்லவி நாயகியாக நடிக்க இருந்தார். அவருக்கு பதிலாக அதிதி ராவ் ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் தொடங்கவுள்ளது. இவ்வருட இறுதியில் படத்தை வெளியிட படக்குழு தீர்மானித்திருக்கிறது.