தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. இந்தப் படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் 1930கள்-40களின் பின்னணியில் எடுக்கப்படும் பீரியட் ஃபிலிமாக உருவாகவுள்ளது.
மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகிறது. இந்தப் படத்திற்கு மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு நாகூரன் படத்தொகுப்பு செய்கிறார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்தப் படம் தொடர்பாக தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜன் கூறும்போது, ''எங்கள் தயாரிப்பு நிறுவனத்தில், பிரமாண்டமான அளவில் உருவாகும் நம்பிக்கைக்குரிய திரைப்படங்களில் ஒன்றாக இப்படம் இருக்கும். 'கேப்டன் மில்லர்' படத்தை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நடிகர் தனுஷுடன் பணிபுரிவது எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும், ஏனெனில் எங்களின் கூட்டணியில் வெளியான முந்தைய திரைப்படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் எனக்கும், தனுஷுக்கும் ஸ்கிரிப்டை விவரித்தபோது, நாங்கள் இருவரும் உற்சாகமானோம், மேலும் பெரிய அளவில் இதனை உருவாக்க விரும்பினோம்.
இயக்குநர் அருணின் வழக்கத்திற்கு மாறான சிந்தனை மற்றும் விதிவிலக்கான படைப்புகளை வழங்கும் முயற்சி, மாறுபட்ட அவரது திரைப்படத் தயாரிப்பு முறைகள் என அனைத்தும் எனக்கும் மிகவும் பிடிக்கும், அவர் ஸ்கிரிப்டை விவரித்தபோது, அவரது சிந்தனை மற்றும் அவரது திரைக்கதையால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தனித்துவமான இசை இந்தப் படத்தின் தரத்தை மேலும் உயர்த்தும்'' என்று தெரிவித்துள்ளார். இதில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.