தமிழ் சினிமா

திரை விமர்சனம்: வேழம்

செய்திப்பிரிவு

நீலகிரியில் தொடர் கொலைகள் நடக்கின்றன. அச்சம் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்குகின்றனர். அந்த நேரத்தில், அசோக் (அசோக் செல்வன்) தனது காதலி லீனாவுடன் (ஐஸ்வர்யா மேனன்) வெளியே சென்று திரும்புகிறார். அப்போது, அவரது கண்முன்னாலேயே லீனாகொல்லப்படுகிறார்.

காதலியை காப்பாற்றமுடியாத குற்ற உணர்ச்சியால் தவிக்கும் அசோக், கொலையாளியின் குரலை நினைவில் வைத்துக்கொண்டு 5 ஆண்டுகளாக தேடுகிறார். அவரால் கண்டுபிடிக்க முடிந்ததா, இல்லையா என்பது கதை.

காதலியை கொன்றவனை, தாடி வளர்த்துக்கொண்டு வைராக்கியத்துடன் தேடி அலையும் நாயகன் என்கிற கதாபாத்திர சித்தரிப்பு, எப்படியாவது அவன் கொலையாளியை கண்டுபிடித்துவிட வேண்டும் என்று பார்வையாளர்களை எதிர்பார்க்க வைக்கிறது. ஏமாற்றம் அளிக்காத திரைக்கதை மற்றும் திருப்பங்கள் மூலம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறார் அறிமுக இயக்குநர் சந்தீப் ஷ்யாம்.காட்சிகளை படமாக்கியுள்ள விதம், தொழில்நுட்ப பங்களிப்புகளை பயன்படுத்திக்கொண்ட விதம் ஆகியவற்றில் தொழில்முறை நேர்த்தி.

அசோக் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளஅசோக் செல்வனுக்கு இது அட்டகாசமான களம். தனது கதாபாத்திரத்தின் இருவித நிலைகளை அழகாக உள்வாங்கி, தோற்றம், உடல்மொழியில் வேறுபாடுகளை காட்டும் அமைதியான நடிப்பின் மூலம் அசரடிக்கிறார். அவரது காதலியாக வரும் ஐஸ்வர்யா மேனன், வசீகர தோற்றம், கதாபாத்திரத்துக்குரிய நடிப்பு இரண்டாலும் ஈர்க்கிறார். இன்னொரு கதாநாயகியாக வரும் ஜனனி, தனது ஒருதலைக் காதலை வெளிப்படுத்தும் இடத்திலும், விழுந்த ஒருவனை எழச் செய்யும் நம்பிக்கையாக தன்னை முன்னிறுத்தும்போதும் கலங்கடிக்கிறார்.

பிரான்சிஸ் என்கிற போலீஸ் அதிகாரியாக வரும் ஷாம் சுந்தர், கதை நகர்வில்தனது கதாபாத்திரத்தின் பங்கை உணர்ந்து, மிகையின்றி நடித்து, யார் இவர் என கேட்க வைக்கிறார்.

நீலகிரியின் அழகு, குளிர், அதன் மர்மம் என அந்த நிலப்பரப்பின் அத்தனை வண்ணங்களையும் கதைக் களத்துக்கு ஏற்ற வகையில் தனது ஒளிப்பதிவில் பதிந்துகொண்டு வந்திருக்கிறார் சக்திஅரவிந்த். எந்த இடத்திலும் கதையோட்டத்தை நிற்கவிடாத அளவுக்கு படத்தொகுப்பை தந்திருக்கும் ஏ.கே.பிரசாத், மென்மையான காதல் பாடல்களையும், பொருத்தமான பின்னணி இசையையும் கொடுத்திருக்கும் ஜானு சந்தர் ஆகியஇருவரும் படத்தை மேலும் உயிரோட்டமாக மாற்றுகின்றனர்.

கொலைக் கதையாக தொடங்கி, காதல்கதையாக உருகவைத்து, த்ரில்லராக முடியும் படத்தின் இறுதியில் சில காட்சிகள் ஊகிக்கும் விதமாக இருப்பது பலவீனம். என்றாலும், இந்த கலவையை நேர்த்தியாக கொடுத்ததால், பார்வையாளர்களை இறுதிவரை ஊக்கப்படுத்தும் ஆழமான த்ரில்லராகிவிடுகிறது ‘வேழம்’.

SCROLL FOR NEXT