கடந்த சில வருடங்களில் மிகச் சில படங்களில் மட்டுமே நடித்த எஸ்.ஜே.சூர்யா, விரைவில் வெளியாக இருக்கும் 'இறைவி' படம் தன்னை ஒரு நடிகராக மீண்டும் அறிமுகப்படுத்தி இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
இது குறித்துப் பேசிய எஸ். ஜே. சூர்யா, ''நான் என்றும் கார்த்திக் சுப்புராஜுக்கு கடன்பட்டவனாக இருப்பேன். நான் ஒரு நடிகனாகவே ஆசைப்பட்டேன். ஆனால் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல்இயக்குநர் ஆனேன். அதையும் மீறி நான் நடித்த படங்களில் அதிக கவனம் செலுத்தவில்லை. இப்போது 'இறைவி' படம் அந்தக் குறையைப் போக்கி, என்னை நடிகராக மீண்டும் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
எல்லா முன்னணி நடிகர்களின் வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான படம் இருக்கும். அதைப்போல எனக்கு 'இறைவி' இருக்கும். முதலில் கதையை கேட்ட போது, இது படமாக எப்படி வெளிவரும் என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் படத்தைப் பார்த்து திகைத்துவிட்டேன். கண்டிப்பாய் ரசிகர்களும் இதே உணர்வைப் பெறுவார்கள்'' என்றார்.
கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் 'இறைவி' படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, கமலினி முகர்ஜி, அஞ்சலி மற்றும் கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தற்போது 'வீரம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாணுடனும், மகேஷ் பாபு படமொன்றில் வில்லனாகவும் நடித்துவருகிறார் எஸ். ஜே. சூர்யா.