தமிழ் சினிமா

'விக்ர மாமுகம் தெரியுதே' - நடிகர் கமல்ஹாசனுக்கு இளையராஜா வாழ்த்து

செய்திப்பிரிவு

விக்ரம் பட வெற்றிக்கு நடிகர் கமல்ஹாசனுக்கு இசையமைப்பாளர் இளையராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது 'விக்ரம்' திரைப்படம். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருக்கிறார். படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

படம் வெளியாகி இரண்டு வாரங்கள் முடிந்து மூன்றாவது வாரத்திலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. வெளியாகி 16 நாட்களை கடந்துவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் படம் 150 கோடியை வசூலித்துள்ளது. இதன் மூலம் 'பாகுபலி 2' படத்தின் மொத்த வசூலை 'விக்ரம்' முறியடித்துள்ளது. மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கும் இந்தப்படம் தற்போதுவரை உலக அளவில் ரூ.350 கோடியை நெருங்கியுள்ள நிலையில், விரைவில் ரூ.400 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வெற்றியை பாராட்டும் வகையில் நடிகர் கமல்ஹாசனை வாழ்த்தியுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. தனது ட்விட்டர் பக்கத்தில் இளையராஜா, "வெற்றிகள் தொடர்ந்து குவியட்டும் சகோதரரே. மட்டற்ற மகிழ்சசியாக இருக்கிறது. அதோடு உங்கள் மலர்ந்த முகம் காணக்காண சந்தோஷமாக இருக்கிறது. விக்ர மாமுகம் தெரியுதே அது வெற்றிப் புன்னகை புரியுதே என மாற்றிக்கொள்ளலாம்" என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதில் கொடுத்துள்ள நடிகர் கமல்ஹாசன், "நம் அன்பை எப்போதாவதுதான் நாம் பிரகடனப்படுத்திக்கொள்வோம். என்றென்றும் என் அன்பு உங்களுக்கும், உங்கள் ஆசி எனக்கும் உண்டு என உணர்ந்த உங்கள் தம்பிகளில் நானும் ஒருவன். நம் பயணம் என்றும்போல் தொடர விழையும் உங்கள் நான்" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT