கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை வேதிகா, அது தொடர்பான அறிகுறிகளை குறைத்து மதிப்பிட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழில், 'முனி', 'காளை', 'சக்கரக்கட்டி', 'பரதேசி', 'காவியத்தலைவன்' உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றவர் நடிகை வேதிகா. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களில் நடித்துள்ள அவர், அடுத்து யோகிபாபு நாயகனாக நடிக்கும் 'கஜானா' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், வேதிகாவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''நான் துரதிர்ஷ்டவசமாக முதன்முறையாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். கடந்த இரண்டு நாட்களாக கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளேன். லேசான அறிகுறிகளைத் தயவுசெய்து குறைத்து மதிப்பிடாதீர்கள். பயங்கரமான உடல் வலி மற்றும் அதிகக் காய்ச்சலுடன் உடல்நலன் பாதிக்கப்பட்டிருப்பது சரியானதல்ல.
ஏற்கெனவே தொற்று பாதித்திருந்தால் மீண்டும் தொற்று பாதிக்காது என நினைக்க வேண்டாம். ஒரு மாதம் முதல் இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை எனக்கு தெரியும். அதனால் உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள். தொற்று வந்தபின் வருந்துவதைக்காட்டிலும், பாதுகாப்பாக இருப்பது பயன்தரக்கூடியது.
நீங்கள் ஒருவரை அல்லது நூறு பேரைச் சந்தித்தாலும் முகக்கவசம் அணியுங்கள். நான் இப்போது நன்றாக இருக்கிறேன். விரைவில் இதிலிருந்து மீண்டுவிடுவேன்'' என வேதிகா பதிவிட்டுள்ளார்.