ரஜினி நடிப்பில் வெளியாகி இருக்கும் 'கபாலி' டீஸருக்கு பல்வேறு திரையுலக நட்சத்திரங்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, கலையரசன், தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. தாணு தயாரித்திருக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இப்படத்திற்கு இன்னும் சில காட்சிகள் மட்டுமே படப்பிடிப்பிற்கு இருக்கின்றன. படத்தின் டப்பிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
"மே 1-ம் தேதி காலை 11 மணிக்கு 'கபாலி' டீஸர் யூ-டியுப் தளத்தில் வெளியிடப்படும்" என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள்.
'கபாலி' டீஸரின் சாதனை
'கபாலி' டீஸர் வெளியானதைத் தொடர்ந்து ரஜினி ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பகிர்ந்தார்கள். இதனால் #KabaliTeaser என்ற ஹேஷ்டேக் இந்தியளவில் ட்ரெண்ட்டானது. இயக்குநர் ராம்கோபால்வர்மா, ராஜமெளலி போன்ற இதர மொழி இயக்குநர்களும் 'கபாலி' டீஸரைப் பாராட்டி புகழ்ந்திருந்தார்கள்.
டீஸர் முடியும் தருவாயில் ரஜினி கூறும் 'மகிழ்ச்சி' என்ற வசனமும் பிரபலமாகி வருகிறது. பலரும் தங்களுடைய பதிலாக மகிழ்ச்சி, மகிழ்ச்சி என்று பதிவிடுவதை சமூக வலைதளத்தில் காண முடிகிறது.
சில மணி நேரத்திற்கு ஒரு முறை எவ்வளவு பேர் பார்த்திருக்கிறார்கள் என்ற கணக்கு யூ-டியுப் தளத்தில் காட்டும். அதன்படி 'கபாலி' டீஸர் வெளியான 5 மணி நேரத்தில் சுமார் 7,84,842 பேர் பார்த்திருக்கிறார்கள். குறைந்த நேரத்தில் அதிக பேர் விருப்பம் தெரிவித்த முதல் டீஸர் என்ற சாதனையும் 'கபாலி' டீஸர் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
'கொலவெறி' சாதனையை முறியடிக்குமா?
இதுவரை 'கொலவெறி' பாடல் மட்டுமே அதிகப் பேர் பார்த்த வீடியோ என கூறப்படுகிறது. 4 மணி நேரத்திலேயே 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்திருப்பதால், அச்சாதனையை 'கபாலி' டீஸர் முறியடிக்கும் என்கிறார்கள்.
மேலும், இப்படத்தின் இயக்குநர் ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் முரளி ஆகியோரும் பலரும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.