புஷ்கர் - காயத்ரி திரைக்கதையில் உருவான 'சுழல்' இணையத் தொடரின் ட்ரெய்லர் வெளியீடப்பட்டுள்ளது. இந்த வெப் சீரிஸ் வரும் 17-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
தமிழில் 'ஓரம் போ' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி. தொடர்ந்து, 'வ - குவாட்டர் கட்டிங்', 'விக்ரம் வேதா' போன்ற படங்களை இயக்கியுள்ளனர். 'விக்ரம் வேதா' திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் மூலம் கவனம் பெற்ற இந்த தம்பதியினர் அடுத்ததாக 'சுழல்' என்ற இணையத் தொடருக்கு திரைக்கதை எழுதியுள்ளனர். இதில் பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா, கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழ்,மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் மட்டுமல்லாமல் 30-க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த வெப் சீரிஸ் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூன் 17-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் இந்த வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
ட்ரெய்லரை பொறுத்தவரை, இந்த வெப்சீரிஸ் ஒரு க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டிருப்பதை உணர முடிகிறது. காணாமல் போன தனது தங்கையை தேடி அலைந்துகொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அவரைத் தேடும் காவல்துறை அதிகாரியாக கதிர் நடித்திருக்கிறார்.
இதனிடையே தொழிற்சாலை மற்றும் அதைச் சார்ந்த தொழிலாளர்களின் போராட்டம் என்ற கிளைக் கதையும் முன்னெடுக்கப்படுகிறது. விறுவிறுப்பாக கட் செய்யப்பட்டிருக்கும் இந்த ட்ரெய்லரில், 'இந்த உலகத்த பத்தி உனக்கு எல்லாம் தெரியும் நெனைச்சேன். இங்க இருக்குற மனுசங்க அவ்ளோ சிம்பிளாவோ, ஈஸியாவோ இல்ல' போன்ற வசனமும், ட்ரெய்லர் முழுக்க பின்னணியில் ஒளிக்கும் வசனமும் கவனம் ஈர்க்கிறது.