இம்மாதம் 9-ம் தேதி சென்னையை அடுத்துள்ள மகாபலிபுரத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற உள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். 'நானும் ரவுடிதான்' திரைப்படத்தில் நடித்தபோது இருவரும் காதலிக்க தொடங்கினர். இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், இவர்கள் திருமணம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், ''தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் குடும்பத்தார் முன்னிலையில் எளிமையாக நடந்ததாகவும், திருமணம் குறித்து அனைவருக்கும் வெளிப்படையாக அறிவிப்போம்'' எனவும் நயன்தாரா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் ஜூன் 9-ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது இவர்களின் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் நடக்கவுள்ளது.
முன்னதாக, முதலில் திருப்பதியில் திருமணம் நடத்த இருவரும் திட்டமிட்ட நிலையில், அங்கு 150 விருந்தினர்கள் வரை திருமணத்தில் கலந்துகொள்ள திருப்பதி கோவில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை என கூறப்பட்டது. இதனாலே இப்போது திருமணத்தை மகாபலிபுரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே மகாபலிபுரத்தில் ஒரு ரிசார்ட்டில் அதே ஜூன் 9-ம் தேதி விமரிசையாக நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நடக்கவுள்ளது. திருமண நிகழ்வை தனியார் ஓ.டி.டி நிறுவனம் ஒன்று வெளியிட உள்ளது.
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விக்னேஷ் சிவன், "நானும், நயன்தாராவும் வரும் ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்ய உள்ளோம். திருப்பதி கோயிலில் திருமணம் செய்ய முடிவெடுத்தோம். ஆனால், பயண தூரம் உள்ளிட்ட சில காரணங்களால், மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவை மாற்றினோம்.
எங்களுடைய திருமணம் 9ஆம் தேதி நடைபெறும். எங்களுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என குறுகிய வட்டத்தினருக்கு மட்டுமே திருமண அழைப்பு விடுத்துள்ளோம். அவர்கள் முன்னிலையில் திருமண செய்ய உள்ளோம். தற்போது வாழ்வின் அடுத்தக்கட்டத்திற்கு நகர்கிறேன். உங்கள் அன்பும் ஆதரவும் எப்போதும் தேவை" என்று தெரிவித்துள்ளார்.