தமிழ் சினிமா

“சூர்யாவுக்கான நன்றியை அடுத்த படத்தில் காட்டிவிடலாம்” - ‘விக்ரம்’ வெற்றிக்கு கமல் நன்றி

செய்திப்பிரிவு

''கடைசி 3 நிமிடங்கள் வந்து திரையரங்குகளை அதிர வைத்த அருமை தம்பி சூர்யா, அன்பிற்காக மட்டுமே அதை செய்தார். நன்றி சொல்லும் படலத்தை அடுத்து நாங்கள் இணையும் படத்தில் முழுவதுமாய் காட்டிவிடலாம் என நினைக்கிறேன்'' என ‘விக்ரம்’ வெற்றி குறித்து கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

'விக்ரம்' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், ரசிகர்களின் பேராதவிற்கு நன்றி தெரிவித்து கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் பேசும் அந்த வீடியோவில், ''தரமான திரைப்படத்தை தாங்கிப்பிடிக்க தமிழ் ரசிகர்கள் தவறியதேயில்லை. திறமையான தரமான நடிகர்களையும் தான். அந்த வெற்றி வரிசையில் என்னையும், எங்கள் ‘விக்ரம்’ படத்தையும் நீங்கள் தேர்ந்தெடுத்தது எங்கள் பாக்கியம்.

பெயர் தெரியாமல் பின்னணியில் வேலை செய்த உங்கள் பாராட்டுகள் பகிர்ந்தளிக்கப்படுவதுதான் நியாயம். தம்பிகள் விஜய் சேதுபதி, பஹத் பாசில், செம்பன் வினோத், நரேன் என வீரியமிக்க நடிகர் படை இதற்கு முக்கியக் காரணம். கடைசி 3 நிமிடங்கள் வந்து திரையரங்குகளை அதிர வைத்த அருமை தம்பி சூர்யா அன்பிற்காக மட்டுமே அதை செய்தார். நன்றி சொல்லும் படலத்தை அடுத்து நாங்கள் இணையும் படத்தில் முழுவதுமாய் காட்டிவிடலாம் என நினைக்கிறேன்.

லோகேஷுக்கு சினிமாவிலும், என் மீதும் இருக்கும் அன்பு, படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும், படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரிகிறது. ரசிகர்களின் அன்பும் அவ்வாறாகவே இருக்கிறது. உங்கள் அன்பு தொடர விழையும் ராஜ்கமல் இன்டர்நேஷ்னலின் ஊழியன் உங்கள் நான்'' என்று தெரிவித்துள்ளார்.

வீடியோ இங்கே...

SCROLL FOR NEXT