திருட்டு விசிடி பிரச்சினை குறித்து நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் விஷால், தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, எல்ரெட் குமார் உள்ளிட்டவர்கள் நேற்று நிருபர்களை சந்தித்தனர். அப்போது விஷால் கூறியதாவது:
பெங்களூருவில் உள்ள ஓரியன் மால் பிவிஆர் தியேட்டரில் திருட்டு விசிடி எடுத்ததை ஆதாரத்தோடு தயாரிப்பாளர் சங்கத்திடம் ஒப்படைத்திருக்கிறோம். ஆனால் இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது வருத்தமளிக்கிறது.
நடிகனால் ஒரு தயாரிப்பாளர் நஷ்டம் அடைந்துவிட்டால் அதற்காக போராடி அந்த தயாரிப்பாளருக்கு நஷ்ட ஈட்டை பெற்றுக்கொடுக்க ஆர்வம் செலுத்தும் தயாரிப்பாளர் சங்கம், இந்த விஷயத்தில் ஏன் சாக்கு போக்கு கூறுகிறார்கள் என்பது தெரியவில்லை.
இவ்வாறு விஷால் கூறினார்.
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும்போது, “பெங்களூருவிலுள்ள பிவிஆர் தியேட்டரில் கடந்த சில மாதங்களில் ‘24’, ‘தெறி’, ‘இஞ்சி இடுப்பழகி’ உட்பட 7 படங்களின் திருட்டு விசிடிக்கள் தயாராகியுள்ளன. இந்த ஆண்டில் 80 சதவீத வருமானம், அதாவது 800 கோடியில் இருந்து 1000 கோடி வரை திருட்டு விசிடிக்கு கிடைக்கிறது. படம் எடுக்கும் தயாரிப்பாளர் 20 சதவீத வருமானத்தைக்கூட பார்க்க முடியவில்லை.
தயாரிப்பாளர் சங்கத்திடம் இவ்வளவு ஆதாரங்கள் கொடுத்தும் அலட்சியம் காட்டுவது வருத்தமளிக்கிறது. இது தொடர்ந்தால் ஒரே வழி, தயாரிப்பாளர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதுதான்’’ என்றார்.