தமிழ் சினிமா

முதல் பார்வை: கோ 2 - மிக நிதான ஓட்டம்!

செய்திப்பிரிவு

தியேட்டர்களில் ஏகப்பட்ட முறை போடப்பட்ட டிரெய்லர், ' கோ 2 ' என்ற படத்தலைப்பு, பாபி சிம்ஹா ஹீரோ என எகிற வைத்த எதிர்பார்ப்புகளால் ‘கோ 2’ படத்திற்கு சென்றேன்.

தமிழக முதல்வரான பிரகாஷ்ராஜ் பாபி சிம்ஹாவால் கடத்தப்படுகிறார். ஏன் கடத்துகிறார்? பிரகாஷ்ராஜ் தப்பித்தாரா, பாபி சிம்ஹா தப்பித்தாரா? கடத்தியதன் நோக்கம் நிறைவேறியதா என்பது தான் 'கோ 2'.

முதல் காட்சியிலேயே கதைக்குள் நுழைய, அட டாப் கியரில் பயணிக்கப் போகிறது படம் என நிமிர்ந்து உட்கார்ந்தால், அடுத்தடுத்த காட்சிகளில் கியரைக் குறைத்து, கிட்டத்தட்ட நியூட்ரலில் ஓடும் நிலைக்கு வந்துவிட்டது திரைக்கதை. ஒரு முதல்வரைக் கடத்தியிருக்கிறார்கள். அதற்கான காரணம், சுற்றி நடக்கும் சம்பவங்கள் என எவ்வளவு பரபரப்பாக நகர்த்தியிருக்கலாம்? லட்டு மாதிரி கிடைத்த சந்தர்ப்பத்தைத் தவறவிட்டு, சொன்னதையே சொல்லி சுற்றிச் சுற்றி ஜிலேபி பிழிந்திருக்கிறார்கள்.

தேர்தல் வரும் நேரம், காரசாரமாக அரசியல் பேசி அனல்பரத்துவார்கள் எனப் பார்த்தால், போங்காட்டம் ஆடிவிட்டார்கள். டிரெய்லரை நம்ம்ம்ம்பி வந்தோமே.. டிரெய்லர்ல போட்டது மட்டும் தான் ஹைலைட்னா எப்படி ப்ரோ?

தேசிய கீதத்தில் சேரன் விளையாடிய மைதானத்தில், ஓரமாக கோலி விளையாடியிருக்கிறார்கள். மீத்தேன் திட்டம், சமீபத்திய வெள்ளம், டாஸ்மாக், கல்வி என சமகால அரசியல் பேசினாலும், எந்தக் காட்சியிலும் அழுத்தம் இல்லை. பின்பாதியில் வரும் டிவிஸ்ட் மட்டும் போதும் என நினைத்துவிட்டார்கள் போல.

பாபி சிம்ஹாவும் பிரகாஷ்ராஜும் பேசும் வசனங்களுக்கு இரண்டு மூன்று இடத்தில் அப்ளாஸ்.. மற்றபடி, வசனங்களில் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். முக்கியமாக பாபி சிம்ஹா வசன உச்சரிப்பில் இன்னும் கவனம் செலுத்தினால் நல்லது. அவர் சீரியஸாக பேசும்போது, மாறுவேடப் போட்டியில் சிறுவர்கள் பேசுவது நினைவுக்கு வருகிறது.

நிக்கி கல்ராணி, பால சரவணன் அவர்களுக்கான கதாபாத்திரத்துக்கு பாதகம் இல்லாமல் செய்திருக்கிறார்கள். நாசரும் கருணாகரனும் 5 நிமிடங்கள் வந்தாலும் ‘நச்’. குறிப்பாக கருணாகரன் பின்னுகிறார்.

ஒளிப்பதிவில் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் பெரிதாக இல்லை. எடிட்டிங்கில் ஏகப்பட்ட ஜம்ப். என்னாச்சு பாஸ்? இந்த மாதிரியான படங்களுக்கு பின்னணி இசை தான் பலமே. இதில் அது மிஸ்ஸிங். பின்பாதியில் வரும் ஒரு மான்டேஜ் பாடல் மட்டும் தேறுகிறது.

பின்பாதியில் காட்டிய கொஞ்சூண்டு விறுவிறுப்பை, முன்பாதியில் கொண்டு வந்திருந்தால், 'கோ' அளவிற்கு அரசியல் படமாக இல்லாவிட்டாலும், ஒரு சுவாரஸ்யமான படமாகவாவது அமைதிருக்கும்.

இயக்குநர் சரத்.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!

SCROLL FOR NEXT