தமிழ் சினிமா

திரை விமர்சனம்: விக்ரம்

செய்திப்பிரிவு

தேசிய போதைப் பொருள் தடுப்புபிரிவைச் சேர்ந்த சில காவல் அதிகாரிகள், முகமூடி அணிந்தஒரு குழுவால் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர். பொதுவெளிக்கு தெரியாமல், அக்கொலைகளின் பின்னிருப்பவர்களை புலனாய்வு செய்து கண்டுபிடிக்கும் பொறுப்பை ஏஜென்ட் அமர்(பகத் பாசில்) தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்கிறார் காவல் துறை தலைவரான ஜோஸ் (செம்பொன் வினோத்). கொலைகளுக்கான காரணம், பின்னணி என்ன? கொலைகளைசெய்தவர்களின் மூளையாக செயல்பட்டது யார் என்பதையெல்லாம் புலனாய்வில் அமர் குழுவினர் கண்டுபிடித்தனரா, இல்லையா என்பது கதை.

கொலையானவர்களின் குடும்பத்தினரையும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் அமர் குழுவினர் தேடிச் சென்று விசாரிக்கும் காட்சிகள்முதல் பாதி படத்தை நிறைத்துவிடுகின்றன. விசாரணையின் முடிவில், முக்கிய மூளையாக இருக்கப்போவது யார் என்பதும் தெரிந்த விடையாக இருப்பதால் ஏற்படும் அயர்ச்சியைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால், விசாரணைக்கு நடுநடுவே அமரின் காதலும், அவரது திருமணமும் உருவாக்கும் உணர்வுப்பூர்வ அழுத்தம், முன்னாள் ‘ரா’ அதிகாரி விக்ரமின் (கமல்) அறிமுக சண்டைக் காட்சி ஆகியவை, ரசிகர்களை இரண்டாம் பாதிக்கான எதிர்பார்ப்பில் நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. அந்த எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தியும் செய்கிறது எஞ்சிய படம்.

விஜய்சேதுபதி, பகத் பாசில் போன்ற முன்னணி கலைஞர்களுக்கு, கமல் இப்படத்தில் கொடுத்திருக்கும் ‘திரை வெளி’ என்பது, கண் துடைப்பாக இல்லாமல் முழுமை கொண்டதாக இருக்கிறது. முதல் பாதி படத்தைபகத் பாசில் ஏந்திக்கொள்வதும், விஜய்சேதுபதி கதாபாத்திரத்துக்கான ‘அறிமுகம்’ தொடங்கி, அதன் தனித்துவம் ‘மாஸ் அப்பீலுடன்’ துலங்குவது வரை இப்படத்தில் சாத்தியமாவது கமலின் பரந்த பார்வையால்தான்.

‘கிளைக் கதை’ உத்தியை எடுத்தாண்டு, ஏற்கெனவே பிரபலமான ஒருகதாபாத்திரத்தின் நீட்சியாக, கமலின்வயதுக்கும் அவருடைய முதிர்ச்சியான தோற்றத்துக்கும் ஏற்ப ‘விக்ரம்’கதாபாத்திரத்தை புதிய களத்தில் வெற்றிகரமாக ‘மீள்’ வார்ப்பு செய்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.அதேபோல, இப்படத்தின் தொடர்ச்சிக்கான முன்மொழிதலையும் அழுத்தமாகப் பதிந்திருக்கிறார்.

சொந்த இழப்பை கடந்து, போதைப்பொருள் பரவலைத் துடைத்தெறிய ‘அசுர’ மனநிலையில் நின்று வேட்டையாடும் முன்னாள் ‘ரா’ அதிகாரியாக,தனது வயதுக்குரிய முதிர்ச்சியை ஊதித் தள்ளிவிட்டு நடிப்பில் புகுந்து விளையாடுகிறார் கமல்.

பகத் பாசில் பார்வைகள் வழியாகவே மிரட்டினால், சந்தானம் என்கிற போதைப் பொருள் பயன்படுத்தும் கொழுத்த மாபியா ஒருவனின் விறைப்பான உடல்மொழியைக் கொண்டுவந்து, தனது ‘அண்டர் பிளே’ நடிப்பின் முன்மாதிரியை மீண்டும் பதிந்துவிட்டுப்போகிறார் விஜய்சேதுபதி. சில காட்சிகளே வந்தாலும் காயத்ரி சங்கரும், ஏஜென்ட் டீனாவாக வரும்பெண்மணியும் மனதில் தங்குகின்றனர்.

போதைப் பொருள் மாஃபியாவை பின்னணியாகக் கொண்ட கதைக் களத்தில், அதன் பரவலால் விளையக்கூடிய சமூகச் சீர்கேடு குறித்து, கமல் ஒருகாட்சியில் பேசுகிறார். அந்த பேச்சு தாக்கம் ஏற்படுத்துவதாக இல்லை. அதேபோல, போதைப் பொருள் ஒன்றைவாயில் போட்டுக் கடித்ததும் அரக்கத்தனமான வலிமை வந்துவிடுவதாக விஜய் சேதுபதி ஏற்றுள்ள கதாபாத்திரம் எழுதப்பட்டிருப்பது போதைப் பொருளுக்கான விளம்பரம்போல உள்ளது.

காளிதாஸ் ஜெயராமின் மரணம் உருவாக்கியிருக்க வேண்டிய அழுத்தம், அதை தவறவிடுவதும், கமலுக்கும்அவரது மகனுக்குமான உறவில் ஊடாடிய ரகசியம் பார்வையாளர்களைத் தொடாமல் போய்விடுவதும் திரைக் கதையின் பலவீனம்.

சண்டை, சேஸிங், ப்ளாஸ்டிங் உள்ளிட்ட ஆக்‌ஷன் காட்சிகளின் பிரம்மாண்டம், வரிசை கட்டும் கொலை கள், இறுதியில் ‘ரோலக்ஸ்’ கதாபாத்திரத்தின் அறிமுகம், முன்பின் னான கதை சொல்லலுக்கு குழப்பம் ஏற்படுத்தாத படத்தொகுப்பு ஆகியவை படத்தில் மலிந்திருக்கும் ‘தர்க்க’ப் பிழைகளை கடந்து அடுத்தடுத்த காட்சியில் கண்களை பதிக்கச் செய்யும் ஆக்‌ஷன் த்ரில்லராக விரிகிறது படம். அதற்கு சண்டை இயக்குநர்கள் அன்பறிவ், ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன், பிலோமின் ராஜின் எடிட்டிங், பின்னணி இசை தந்திருக்கும் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் கூட்டுழைப்பு மிரட்டலாக கைகொடுக்கிறது.

பாடல்களின் தேவையே இல்லாத இப்படத்தில், இடைச்செருகலான 2 பாடல்களைத் தாண்டி, இந்நாள் படைப்பாளிகளுடன் இணைந்து கமல் தந்திருக்கும் அதிரடி ஆக்‌ஷன் பிளாக்குகளுக்காக ‘விக்ர’முக்கு வெல்கம் சொல்லலாம்!

SCROLL FOR NEXT