நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'சைத்தான்' படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படம் ஜுலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'பிச்சைக்காரன்' படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் 'சைத்தான்' திரைப்படம் வெளிவரவுள்ளது. இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
அருந்ததி நாயர், கிட்டி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்தில், சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் ஜோ டி க்ரூஸ் நடிகராக அறிமுகமாகிறார்.
விஜய் ஆண்டனி இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா, ஒடிசா உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. படத்தின் இறுதி கட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 'சைத்தான்' படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஆரா சினிமாஸ் வெளியிடுகிறது. விஜய் ஆண்டனி படங்களில் இந்தப் படமே அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.