தமிழ் சினிமா

திரை விமர்சனம்: சேத்துமான்

செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு சிறியகிராமத்தில் தாத்தா பூச்சியப்பனின் (மாணிக்கம்) அரவணைப்பில் வளர்கிறான் 10 வயது சிறுவன் குமரேசன் (அஸ்வின்). அவனை நன்கு படிக்கவைத்து ஆளாக்க விரும்புகிறார் ஒடுக்கப்பட்ட வகுப்பை சேர்ந்த பூச்சியப்பன். கூடை பின்னி விற்கும் அவர், ஊர் மிராசுவான வெள்ளையனுக்கு (பிரசன்னா பாலசந்திரன்) எடுபிடி வேலையும் செய்கிறார். இந்நிலையில், சேத்துமான் கறி(பன்றிக் கறி) சாப்பிட விரும்பும் வெள்ளையன், அதற்காக ஆள் சேர்க்கிறார். ஒரு பன்றியை வாங்கி, அதை கொன்று, அதன் மாமிசத்தை நண்பர்களுடன் பங்கு பிரித்துக்கொள்ள திட்டமிடுகிறார். அந்த நாளும் வருகிறது. பூச்சியப்பனும், பேரன் குமரேசனும் அந்த நாளை எப்படி எதிர்கொண்டனர் என்பது கதை.

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘வறுகறி’ என்ற சிறுகதையை முழுநீள திரைப்படமாக விரித்து எழுதி,இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் தமிழ். இதற்காக, மையக் கதையைவிட்டு விலகாமல், அதற்கு மிக நெருக்கமான சமகால நிகழ்வுகளின் தாக்கத்துடன் காட்சிகள், பாத்திரங்களை அமைத்துள்ளார்.

பூச்சியப்பன் - அவரது பேரன் குமரேசன் இடையிலான பாசப் பிணைப்பு உணர்வுபூர்வமாக பதிவாகியிருக்கிறது.

கேமரா இருப்பதே தெரியாததுபோல, பூச்சியப்பனாக வாழ்ந்து காண்பிக்கிறார் கூத்துக் கலைஞர் மாணிக்கம். குமரேசனாக நடித்துள்ள சிறுவன் அஸ்வின், வெள்ளையனாக வரும் பிரசன்னா, அவர் மீது ஆதிக்கம் செலுத்தும் மனைவியாக வரும் சாவித்திரி, சுப்ரமணியாக வரும் சுருளி, ரங்கனாக வரும் குமார் என துணைகதாபாத்திர நடிகர்களும் வாழ்ந்திருக்கிறார்கள்.

பன்றி இறைச்சியை உண்பது, அதற்காக அதை வளர்ப்பது தொடர்பில் பின்னிப்பிணைந்திருக்கும் உணவு அரசியல், பெருமாள் முருகனின் சிறுகதை போலவே படத்திலும் காத்திரமாகப் பதிவாகியுள்ளது. வசனத்தை பெருமாள் முருகனே எழுதியுள்ளார்.

சிறுகதையில் இருக்கும் அங்கதம், வெள்ளையன் - பூச்சியப்பன் உறவில் இருக்கும் பன்முகத் தன்மை, பன்றிக்கறி சமைப்பது தொடர்பான ரசனையான நுணுக்கங்கள் போன்றவற்றையும் எடுத்தாண்டிருந்தால் படம் இன்னும் மேம்பட்ட படைப்பாகியிருக்கும்.

வட்டாரத் தன்மையுடன் கூடிய இசையும் (பிந்து மாலினி), ஒலிகளும் களத்துக்குள் நம்மை பிரவேசிக்க வைக்கின்றன. குறிப்பாக, பன்றியின் உறுமல் வேறுபாட்டை பதிந்த விதம் நேர்த்தியும், நம்பகமும் நிறைந்திருக்கிறது.

உணவு அரசியல், சாதிய வன்முறை இரண்டும் பின்னிப் பிணைந்த மாநிலங்களில் தமிழகமும் விலக்கல்ல என்பதை பிரச்சாரமின்றி எடுத்துக்காட்டிய வகையில் கம்பீரமான படைப்பாக நிமிர்ந்து நிற்கிறது ‘சேத்துமான்’.

SCROLL FOR NEXT