நாமக்கல் : சாலை விபத்தில் உயிரிழந்த ரசிகரின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நடிகர் சூர்யா, ரசிகரின் உருவ படத்திற்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
நாமக்கல் மாவட்டம் மேட்டுத்தெருவைச் சேர்ந்த 25வயதான ஜெகதீஷ் சூர்யாவின் தீவிர ரசிகர். தவிர, 15 ஆண்டுகளாக சூர்யா ரசிகர் மன்றத்தில் பணியாற்றியுள்ளார். இவருக்கு திருமணமாகி ராதிகா என்ற மனைவியும், 2 வயதில் பெண் குழந்தையும் உண்டு. இந்நிலையில், கடந்த 21 ஆம் தேதி நாமக்கல் துறையூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் ஜெகதீஷ். அப்போது நாமக்கல் காவல் நிலையம் அருகே சாலையின் வளைவில் திரும்பும்போது லாரி ஒன்று இவர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெகதீஷ் ஆன்புலன்ஸ் மூலம் சேலத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டது. இதையடுத்து உயிரிழந்த ரசிகரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக, நாமக்கல் மேட்டுத் தெருவில் உள்ள அவரது இல்லத்திற்கு நேற்று வந்த நடிகர் சூர்யா, உயிரிழந்த ஜெகதீஷின் மனைவி ராதிகா மற்றும் அவரது உறவினர்களுக்கு கண் கலங்கியவாறு ஆறுதல் தெரிவித்து ஜெகதீஷின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.