தமிழ் சினிமா

கேஜிஎஃப் 3 படத்தில் ஹிருத்திக் ரோஷன்? - படத்தின் தயாரிப்பாளர் விளக்கம்

செய்திப்பிரிவு

'கே.ஜி.எஃப் 3' படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிக்க உள்ளதாக வெளியான தகவலுக்கு படத்தின் தயாரிப்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

பிரசாந்த் நீல் இயக்கிய 'கே.ஜி.எஃப்: சாப்டர் 2' படத்தில், யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ் உள்பட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் வெளியான இந்தப் படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்தப் படத்தின் மூன்றாம் பாகம் வெளியாக இருப்பதாகவும் அதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் விரைவில் தொடக்க உள்ளதாக கூறப்பட்டது. இதனிடையே 'கே.ஜி.எஃப் 3' படத்தின் மூன்றாம் பாகத்தில் பிரபல இந்தி ஹீரோ ஹிருத்திக் ரோஷன் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் 'கேஜிஎஃப் 3' படம் குறித்து தெளிவுபடுத்தியுள்ள ஹோம்பேல் ஃபிலிம்ஸின் இணை நிறுவனர் விஜய் கிரகந்தூர், பாலிவுட் ஹங்காமாவுக்கு அளித்த பேட்டியில், ''கேஜிஎஃப்: அத்தியாயம் 3 படத்தின் தொடக்க பணிகள் இந்த ஆண்டு நடக்க வாய்ப்பில்லை. எங்களிடம் சில திட்டங்கள் உள்ளன.

ஆனால் பிரஷாந்த் நீல் தற்போது சலாரில் பிஸியாக இருக்கிறார். அதே நேரத்தில் யஷ் தான் நடிக்க உள்ள புதிய படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிட உள்ளார். எனவே, அவர்கள் இருவரும் சரியான நேரத்தில் ஒன்றிணையும்போது தான் 'கேஜிஎஃப் 3' படத்தின் வேலைகளை தொடங்குவது குறித்து யோசிக்க முடியும். இன்னும் எந்த நட்சத்திரத்தேர்வும் நடைபெறவில்லை. இருவரின் தேதியையும் இறுதி செய்த பின்புதான் நடிகர்களின் தேர்வு நடைபெறும்'' என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT