அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘யானை’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது.
ஹரி இயக்கத்தில் அருண் விஜய், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, ராதிகா சரத்குமார், யோகி பாபு, ராஜேஷ், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘யானை’, டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தினை தயாரித்து வருகிறது. இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
ஜூன் 17ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ளதால், அதற்குத் தகுந்தாற்போல் படத்தின் இறுதிக்கட்டப் பணிகளையும் துரிதப்படுத்தியுள்ளது படக்குழு.
அதேநேரம் படத்தை விளம்பரத்தப்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளது. அதன்படி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. நாளை மறுநாள் (30ம் தேதி) ட்ரெய்லர் வெளியிடப்படவுள்ளது.
ஹரி இயக்கத்தில் கடைசியாக வெளிவந்தது சாமி இரண்டாம் பாகம். அந்தப் படம் தோல்வியை தழுவியதால் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் ஹரி. அதேபோல், சமீபகாலமாக நல்ல படங்களைத் தேர்வு செய்துவரும் அருண் விஜய், தன்னை நிரூபித்த பிறகே ஹரி இயக்கத்தில் கைகோர்த்துள்ளார். இதனால் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய படமாக யானை மாறியுள்ளது.