வர்க்கம், வர்ணம் அடிப்படையில் அணுகப்படும் தீர்ப்புகள் குறித்த விமர்சனத்தை முன்வைக்கும் படைப்புதான் 'வாய்தா'. நீதித்துறை கட்டமைப்பில் உள்ள சில ஓட்டைகள் ஒரு அப்பாவி சலவைத் தொழிலாளி மற்றும் அவரது குடும்பத்தின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதுதான் படத்தின் ஒன்லைன்.
ஒரு விபத்துடன் தொடங்குகிறது படம். சலவைத்தொழில் செய்யும் அப்புசாமி (மு.ராமசாமி) மீது இருசக்கர வாகனம் மோதிவிட, அவரது வலது கை எலும்பு முறிந்துவிடுகிறது. ஆதிக்க சாதியைச் சேர்ந்த முத்துசாமி (பிரசன்னா பாலசந்திரன்) மகனும், உள்ளூர் அரசியல்வாதியும் இந்த விபத்திற்கு காரணமாகின்றனர். இவர்களுக்கிடையிலான இந்த பிரச்சினையில், வழக்கறிஞர் ஒருவர் தனக்கான ஆதாயத்தைத் தேட முயற்சிக்க, இறுதியில் தனக்கேற்பட்ட பாதிப்புக்கு உரிய இழப்பீட்டை அப்புசாமி பெற்றாரா? இல்லையா? என்பதை நீதிமன்றத்தின் வழியே நின்று பேசுகிறது 'வாய்தா'.
படத்தில் அப்புசாமியாக நடித்துள்ள மு.ராமசாமியை இதற்கு முன், 'கே.டி. (எ) கருப்புதுரை பார்த்திருப்போம். அந்தப் படத்தைப்போலவே இந்தப் படத்திலும், நடிப்பில் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக இறுதியில் வரும் அந்த சிங்கிள் ஷாட் காட்சியில் அவர் நடந்து வரும்போது, அழுகையையும், வழியையும் சேர்த்தே கொண்டுவந்த நம்மிடம் கச்சிதமாக கடத்திவிடுகிறார்.
மு.ராமசாமி சம்பந்தப்பட்ட கதாபாத்திரத்திற்கு கச்சிதமான தேர்வு. அவரது மகனாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியிருக்கிறார் புகழ் மகேந்திரன். சில இடங்களில் முதல் படத்திற்கான தடயங்கள் தெரிந்தாலும், அதனை அழிக்க முயலும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கிராமத் துகதைகள், குறிப்பாக மேற்கு மாவட்ட கதைகளத்துக்கு கச்சிதமாக பொருந்தி போகிறார் 'நக்லைட்ஸ்' புகழ் பிரசன்னா பாலசந்திரன். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் எந்த குறையும் வைக்காமல் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சில காட்சிகளே வந்தாலும் நாசர் கவனம் பெறுகிறார். பௌலின் ஜெசிகா, ராணி ஜெயா, உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில் குறை வைக்கவில்லை.
சாதிய வன்மத்தை பேசும் படங்களில் 'சேத்துமான்' படத்திற்கு பிறகு, இந்தப் படத்திலும் கதைக் களமாகியிருக்கிறது மேற்கு மாவட்டம். சேலம் மாவட்டம் மற்றும் அதைச்சுற்றி நிகழ்கிறது கதை. இதுவரை சலவைத் தொழிலாளிகளுக்கான அழுத்தமான கதைக்களத்தை தமிழ் சினிமா பதிவு செய்திருப்பதாக தெரியவில்லை. உதாரணமாக 'சின்ன கவுண்டர்' படத்தில் சலவைத் தொழிலாளியாக வரும் கவுண்டமணி, செந்திலை காமெடி கதாபாத்திரமாகவே பதிவு செய்திருப்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் சலவைத் தொழிலாளிகள் மீதான சமூக, சாதிய பாகுபாடுகள் குறித்து அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ் சினிமாவின் முக்கியமான இடத்தில் நிற்கிறது 'வாய்தா'.
சலவைத் தொழிலாளிகளுக்கு துணி கொடுக்கும்போது, வீட்டுக்கு வெளியே நின்று கொடுப்பது, பணத்திற்கு பதிலாக தானியத்தை அந்த மக்கள் மண்டியிட்டு பெறுவது என அந்த மக்களின் வலியை பதிவு செய்கிறது படம். ஒரு சாதாரண விபத்தை மையப்படுத்தி, அதைச் சுற்றி நடக்கும் சாதி, நீதிமன்ற அரசியல் குறித்து பேச முயற்சித்திருக்கும் விதத்தில் கவனம் பெறுகிறார் இயக்குநர் மகிவர்மன்.
மேற்கு, வட மாவட்டங்களில் நடக்கும் ஆணவக் கொலைகள், வாய்தா என்ற பெயரில் நீதிமன்றத்தின் அலைக்கழிப்புகள், ஆதாயம் தேடும் வழக்கறிஞர்கள் என பல விஷயங்களை படம் பேசுகிறது.
படத்தில் அதன் பொறுமையான திரைக்கதையும், அந்த சூழலுக்கு நாம் பழகப்படுத்திக்கொள்ள ஏற்படும் நேரமும், அதிக கதாபாத்திரங்களும், சுவராஸ்யமில்லாத காட்சிகளும் தான் பிரச்னை. அதேபோல, புகல் மகேந்திரன் மற்றும் பவுலன் ஜெசிகா இடையேயான காதல் காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்ட தேவையில்லாத ஆணியாகத் தோன்றுகிது. இருப்பினும் இரு வேறு சமூகத்தினரின் காதலைப் பதிவு செய்ய அந்தக் காட்சிகள் வைக்கப்பட்டதாக தோன்றுகிறது.
கதைக்களமும், சூழலும், எதார்த்தத்துக்கு நெருக்கமாக இருப்பதால் படத்துடன் நம்மால் ஒன்ற முடிகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் அளிக்கும் இழப்பீடு தொகை உரியவர்களிடம் சென்று முறையாக சேருவதில்லை என்பதை அழுத்தமாக கூறியிருக்கிறது படம். அதன் எதார்த்தத்தை நம்மில் சிலராலும் மறுக்க முடியாது என்பதே உண்மை.
தவிர, சேதுமுருகவேல் அங்காரகனின் ஒளிப்பதிவின் தரத்தை உணர்த்துகிறது படத்தின் இறுதிக் காட்சி. லோகேஸ்வரன் பின்னணி இசையில் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம் என தோன்றுகிறது. படத்தொகுப்பாளர் நரேஷ் குணசீலனும் சில காட்சிகளை வெட்டித் தூக்கியிருக்கலாம்.
மொத்தத்தில் பல முக்கியமான விஷயங்களை அழுத்தமாக பதிவு செய்ததன் மூலம் கவனம் பெறுகிறது 'வாய்தா'. சமீபத்தில் தமிழ் சினிமாவில் இதுபோன்ற முன்னெடுப்புகள் வெகுஜன மக்களை சென்று சேருவதில்லை என்பதும், அதற்கான வெளியை திரையரங்குகள் உருவாக்க முன்வருவதில்லை என்பதும் கூடுதல் வருத்தமே!