'விஜய் 66' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தலைப்பிடப்படாத படம் 'விஜய் 66' என அடைமொழியிட்டு அழைக்கப்படுகிறது. தில் ராஜூ தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது.
பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு உருவாகும் இந்தப் படப்பிடிப்பில் முக்கியமான பாடல் மற்றும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் 'விஜய் 66' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படும் எனவும் படத்தின் தயாரிப்பு நிறுவனமாக வெங்டேஸ்வரா கிரியேஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாவது குறிப்பிடத்தக்கது.