தங்கர் பச்சான் இயக்கும் புதிய படத்திற்கு 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கவுள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு வெளியான 'களவாடிய பொழுதுகள்' படத்திற்கு பிறகு தங்கர் பச்சான் தனது மகன் விஜித் பச்சானை வைத்து 'டக்கு முக்கு டிக்கு தாளம்' படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' என்ற புதிய படம் ஒன்றை தங்கர் பச்சான் இயக்கவுள்ளார்.
பாரதிராஜா, யோகிபாபு, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகிய மூவரின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். படத்தில் முக்கிய பெண் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகையை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் வீரசக்தி தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் 25-ம் தேதி முதல் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
இந்தப் படம் தொடர்பாக தயாரிப்பாளர் வீரசக்தி கூறும்போது, "மனித மனங்களின் நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்தும் அற்புதமான படைப்பு இது. இக்கதையை கேட்டபோதே கண்ணீர்விட்டு அழுதுவிட்டேன். அடுத்த நொடியே படத்தை தயாரிக்க முடிவெடுத்துவிட்டேன். இது தங்கர் பச்சானின் அழுத்தமான மற்றொரு படைப்பு. தமிழ் சினிமாவின் முக்கியமான ஒரு படமாக இது இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.