'மெட்ரோ' படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் மறுப்பு தெரிவிக்க, மறுதணிக்கையில் 'ஏ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.
ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் சிரிஷ், பாபி சிம்ஹா, சென்ட்ராயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'மெட்ரோ'. ஜோஹன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு உதயகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மெட்ரோ தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் தயாரிப்பு முடிந்தவுடன், திரையரங்குகள் கிடைப்பது குறித்து பேசி, பட வெளியீடு முடிவு செய்வது என படக்குழு தீர்மானித்தது. ஜூன் வெளியீட்டை முன்வைத்து தணிக்கை பணிகளைத் துரிதப்படுத்தியது படக்குழு.
இப்படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் "வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கிறது. செயின் பறிப்பு சம்பவங்களை முன்வைத்து படமாக்கி இருக்கிறீர்கள். ஆனால், செயின் பறிப்பு முறைகளை சமூக விரோதிகள் கற்றுக் கொள்ளும் வகையில் காட்சிகள் இருக்கிறது. இதனை தணிக்கை செய்ய முடியாது" என்று தெரிவித்துவிட்டனர். தணிக்கை மறுப்பைத் தொடர்ந்து மறுதணிக்கைக்குச் சென்றது 'மெட்ரோ' படக்குழு. மறுதணிக்கையில் படத்துக்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.
'மெட்ரோ' படம் குறித்து தயாரிப்பு தரப்பில் விசாரித்தபோது, "நிஜத்தில் பல இடங்களில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். மக்களுக்கு தங்கத்தின் மீது இருக்கும் மோகத்தை வைத்து சர்வதேச அளவில் செயல்படும் கும்பலைக் காட்டியிருக்கிறோம். அனைத்துக் காட்சிகளுமே ரொம்ப தத்ரூபமாக படமாக்கி இருக்கிறோம். அதனால் தான் இந்த பிரச்சினை. தற்போது தணிக்கைப் பணிகள் முடிவடைந்து விட்டதால் படத்தை ஜூன் மாதம் வெளியிட தீர்மானித்திருக்கிறோம்" என்றார்கள்.