தமிழ் சினிமா

'வொண்டர்பார்', 'லைகா' தயாரிப்பு நிறுவனங்களின் யூடியூப் சேனல்கள் முடக்கம்

செய்திப்பிரிவு

லைகா மற்றும் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான 'வொண்டர்பார்' ஆகிய நிறுவனங்களின் யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. இவற்றை மீட்கும் முயற்சியில் தொழில்நுட்பக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2013-ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'எதிர் நீச்சல்' படத்தின் மூலம் தயாரிப்பாளரானார் நடிகர் தனுஷ். இதையடுத்து தனது 'வொண்டர்பார் பிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனம் மூலம் 'வேலையில்லா பட்டதாரி', 'காக்கி சட்டை', 'காக்கா முட்டை', 'விசாரணை', 'நானும் ரௌடிதான்', 'விஐபி 2', 'வடசென்னை', 'மாரி 2' உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

இதனிடையே தனுஷின் தயாரிப்பு நிறுவனமான 'வொண்டர்பார்' இப்போது படத்தயாரிப்பில் இருந்து ஒதுங்கியிருந்தாலும், அதன் யூடியூப் சேனல் தொடர்ந்து இயங்கி வந்தது. அதில் ‘மாரி 2’ படத்தின் பிரபல பாடலான "ரௌடி பேபி" பாடல் வெளியிடப்பட்டு பல மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து பல்வேறு புதிய சாதனைகளை படைத்திருந்தது.

இந்நிலையில், இன்று (செவ்வாய் கிழமை) அதிகாலை 3 மணி முதல் இந்த சேனல் ஹேக் செய்யப்பட்டுள்ளது. மர்ம நபர்கள் வேண்டுமென்றே சேனலை ஹேக் செய்துள்ளதாகவும், அதனை விரைவில் மீட்டெடுக்கும் முயற்சியில் தொழில்நுட்பக்குழு முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதேபோல லைகா நிறுவனத்தில் யூடியூப் சேனலும் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT